ராஜபாளையத்தில் , மோசடி புகாரில் சிக்கிய ஆசிரியரை தப்பிக்க விட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்

மோசடி புகாரில் சிக்கிய ஆசிரியரை தப்பிக்கவிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது.

Update: 2018-12-29 22:30 GMT
ராஜபாளையம், 

ராஜபாளையம் முனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வக்கனி (வயது 45). டெய்லரான இவர் தனது உறவினரான தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் புதியராஜ் என்பவருக்கு கடனாக ரூ.6 லட்சம் கொடுத்தாராம். நீண்ட நாட்களாக, கடனை திருப்பி கேட்டும், புதியராஜ் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செல்வக்கனி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கடன் பெற்றதாக ஒப்புக்கொண்ட புதியராஜ், அந்த பணத்தை ஒரு வருடத்திற்குள் திருப்பி தருவதாக போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு வருடமாகியும் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் செல்வக்கனி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் புதியராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு உத்தவிட்டார்.

அதன் பேரில் நேற்று இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் அழைத்து விசாரணை மேற்கொண்டார். அப்போது யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் புதியராஜ் போலீஸ் நிலையத்தில் இருந்து ஓடிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து புகாரில் சிக்கியவரை தப்பிக்க விட்டதாக கூறி இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும், தப்பி ஓடிய புதியராஜை கைது செய்யக் கோரியும் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரனிடம் செல்வக்கனியின் தந்தை பொன்னுசாமி மனு கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்