வீடு, பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்

திருப்பூர் மாவட்டத்தில் வீடு, பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவுரை வழங்கினார்.;

Update: 2018-12-29 22:15 GMT
ஊத்துக்குளி, 

திருப்பூர் மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மெட்ரிக் பள்ளிகள் அளவில் சாதனை படைத்த பள்ளிகள், மாணவர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

இந்த விழாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 144 மாணவ-மாணவிகள், 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற 96 மாணவ-மாணவிகள், 139 பள்ளிகள் மற்றும் அதன் முதல்வர்கள், 11 ஆசிரியர்கள் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு முதல்வர் ஆகியோருக்கு விருது மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி விருது வழங்கி பேசியதாவது:-

மெட்ரிக் பள்ளிகள் கூட்டமைப்பின் நோக்கம் ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகள் மேற்கொள்ளுதல்,மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் மற்றும் வகுப்புகளை நடத்துவது உள்பட பல்வேறு ஆக்கப்பணிகளை மேற்கொள்வதே ஆகும். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டி கவுரவித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஆசிரியர்களின் பணி சமுதாயத்தில் சிறந்தவர்களை உருவாக்கக்கூடிய உயர்ந்த பணியாகும். மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதோடு இல்லாமல் நல்லொழுக்கத்தையும், பெற்றோர் மற்றும் சமுதாயத்தை மதிப்பவர்களாகவும் உருவாக்குவது ஆசிரியர்களின் கடமையாகும். மாணவர்கள் தினமும் ½ மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டில் கவனம் செலுத்தி உடல் ஆரோக்கியத்தை பேணிக்காத்து சிறந்தவர்களாக விளங்க வேண்டும். மாணவர்கள் விடா முயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் கல்வி கற்று வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும்.

தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில் வருகிற 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மீதான தடை அமல்படுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாணவ-மாணவிகள் தங்கள் வீடுகள் மற்றும் பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்து திருப்பூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத முழு சுகாதார மாவட்டமாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, உடுமலை மாவட்ட கல்வி அதிகாரி மணிவண்ணன், கொங்கு மெட்ரிக் பள்ளி தாளாளர் தியாகராஜன், முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, ஊத்துக்குளி தாசில்தார் ரவீந்திரன், திருப்பூர் மாவட்ட மெட்ரிக் பள்ளி கூட்டமைப்பு நிர்வாகிகள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்