நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி

ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ்காரர் பலியானார். பனிமூட்டம் காரணமாக இந்த பரிதாப சம்பவம் நேர்ந்தது.

Update: 2018-12-29 22:15 GMT
ராமநாதபுரம்,


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கீழ்க்குடி கிழக்குத்தெரு பகுதியை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவரின் மகன் மொட்டையன்(வயது27). ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும் ஆதித்தன்(2) என்ற மகனும், சசிந்தா என்ற மகளும் உள்ளனர். மொட்டையன் மகன் ஆதித்தன் விளையாடியபோது வாய் பகுதியில் கம்பு குத்தி காயம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் காட்டி தையல் போட்டுள்ளனர். இந்த தையலை பிரிப்பதற்காக மொட்டையன் நேற்று மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல இருந்தார்.

இதற்காக நேற்று முன்தினம் இரவில் ராமேசுவரம் அப்துல் கலாம் நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மொட்டையன் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை பகுதியில் சென்றபோது அங்கு ரோட்டின் ஓரத்தில் விறகு ஏற்றுவதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் மீது மொட்டையன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த மொட்டையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

அதிகாலை நேரத்தில் அதிக பனிமூட்டம் இருந்துள்ளது. இதனால் எதிரே லாரி நிற்பது தெரியாமல் மொட்டையன் எதிர்பாராதவிதமாக லாரியின் மீது மோதியதால் இந்த பரிதாப சம்பவம் நேர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவரின் உடல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்