வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: 9 மாதங்களுக்கு பிறகு கணவர்-மாமியார் கைது

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் 9 மாதங்களுக்கு பிறகு கணவர்-மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-29 22:15 GMT
ஈரோடு, 

நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் சக்திவேல் (வயது 23). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இதே கல்லூரியில் ஈரோடு வாசுகி வீதியை சேர்ந்த கனகவள்ளி (வயது 23) என்பவரும் படித்து வந்தார்.

ஒரே கல்லூரியில் படித்து வந்ததால் கனகவள்ளிக்கும், சக்திவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இவர்கள் 2 பேரும் கடந்த 2015-ம் ஆண்டு பவானி கூடுதுறையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.


அதன் பின்னர் இவர்கள் ஈரோடு கோட்டை பகுதியில் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு தர்ஷினி (3) என்ற பெண் குழந்தை உள்ளது. கனகவள்ளிக்கும், சக்திவேலுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சக்திவேலும், அவரது தாய் மணியும் (46) சேர்ந்து கனகவள்ளியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கனகவள்ளி தனது கணவரை பிரிந்து ஈரோடு வாசுகி வீதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மனவேதனை அடைந்த கனகவள்ளி தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்து, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி வீட்டில் வைத்து விஷத்தை குடித்துவிட்டார்.

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி மார்ச் மாதம் 2-ந்தேதி கனகவள்ளி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் திருமணம் ஆகி 2½ ஆண்டுகளே ஆனதால் இதுபற்றி ஈரோடு ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கனகவள்ளியை வரதட்சணை கேட்டு தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் சக்திவேல் மற்றும் மாமியார் மணியை நேற்று போலீசார் கைது செய்தனர். கனகவள்ளி தற்கொலை செய்த 9 மாதங்களுக்கு பிறகு கணவர்-மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்