சத்தியமங்கலம் வனப்பகுதியில் முதல் முறையாக வண்ணத்துப்பூச்சி - பறவைகள் கணக்கெடுக்கும் பணி

சத்தியமங்கலம் வனப்பகுதியில் முதல் முறையாக, வண்ணத்துப்பூச்சிகள்- பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

Update: 2018-12-29 22:00 GMT
பவானிசாகர், 


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தலமலை, தாளவாடி, டி.என்.பாளையம், கேர்மாளம், உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, கரடி, சிறுத்தை, செந்நாய், புலி, மான், காட்டெருமை, கழுதைப்புலி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

ஆண்டுக்கு 2 முறை இந்த வனப்பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். இந்த நிலையில் வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் அதிகமாக வசிப்பதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் இதுபற்றி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தனர். அதன்படி சத்தியமங்கலம் வனப்பகுதியில் முதல் முறையாக வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பறவைகள் குறித்த 2 நாள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.

தலைமை வனப்பாதுகாவலர் நாகநாதன் உத்தரவின் பேரில் சத்தி வன மாவட்ட அதிகாரி அருண்லால் மேற்பார்வையில் புலிகள் காப்பகத்தில் உள்ள 7 வனச்சரகங்களிலும் நேற்று வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

வனவர், வேட்டை தடுப்புகாவலர், தன்னார்வலர்கள் உள்பட ஒரு குழுவுக்கு 6 பேர் வீதம் 15 குழுவினர் காராச்சி கொரை, கூலித்துறை பட்டி, தெங்குமரஹாடா, தலமலை, திம்பம், சிக்கள்ளி, ஆசனூர், பசுவனாபுரம், கடம்பூர், மாக்கம்பாளையம், நவக்கிணறு, கரிக்கால் மொக்கை, காட்டு பண்ணாரி, குண்டேரிப்பள்ளம் அணை உள்ளிட்ட வன பகுதிகளில் கணக்கெடுக்க சென்றனர்.

காலை, மாலை என 2 வேளை வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள் போன்றவைகளை குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கென அதிநவீன கேமராக்கள், வியூ பைண்டர், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

இந்த கணக்கெடுப்பு பணி முடிந்தபின் எத்தனை வகையான வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பறவைகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வசிக்கின்றன என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். அதன்பின்னர் இந்த விவரம் அறிக்கையாக சென்னை முதன்மை வனப்பாதுகாவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்