விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் ரூ.30 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாவிட்டால் கடைகளுக்கு ‘சீல்’
விருத்தாசலத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் ரூ.30 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாததால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகளிடம் உடனடியாக வாடகையை செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கை செய்துவிட்டு வந்தனர்.;
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் காட்டுக்கூடலூர் சாலையில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்குள்ள கடைகள் நகராட்சி மூலம் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் 15 கடைகளை சேர்ந்த வியாபாரிகள், கடந்த ஒரு ஆண்டாக வாடகையை செலுத்தாமல் இருந்து வருகிறார்கள். இதன் மூலம் ரூ. 30 லட்சம் பாக்கி உள்ளது. இந்த தொகையை கட்டக்கோரி, நகராட்சி நிர்வாகம் பலமுறை சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியும், அவர்கள் கட்ட முன்வரவில்லை.
இந்நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு நகராட்சி பொறியாளர் பாண்டு தலைமையில் மேலாளர் அசோக்குமார், நகரமைப்பு ஆய்வாளர் சேகர், வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் வருவாய் உதவியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு சென்றனர்.
அப்போது, அங்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க போவதாக அவர்கள் தெரிவித்தனர். தங்களுக்கு சிறிது காலஅவகாசம் வேண்டும் என்று வியாபாரிகள் கேட்டுக்கொண்டதால், அதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர்.
இதன் பின்னர் 12 மணிக்கு, வியாபாரிகளிடம் சென்று அதிகாரிகள் வாடகை பணத்தை கேட்டனர். அப்போது வியாபாரிகள், தங்களால் ஒரே தவணையாக வாடகை பணத்தை செலுத்த முடியவில்லை, எனவே நாளை(திங்கட்கிழமை) வரை கால அவகாசம் வேண்டும் என்றார்கள். இதற்கு அதிகாரிகள் முதலில் உடன்படாததால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் பின்னர் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். இது தொடர்பாக எழுத்து பூர்வமாக வியாபாரிகளிடம் இருந்து எழுதி வாங்கி கொண்ட அதிகாரிகள், வாடகை பணத்தை செலுத்த தவறினால் கடைகளுக்கு சீல் வைப்போம் என்று எச்சரிக்கை செய்து விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதேபோல் விருத்தாசலம் பஸ்நிலையத்திலும் நகராட்சி சார்பில் ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் 2 கடைகளை சேர்ந்த வியாபாரிகள் வாடகை பணத்தை கட்டாமல் உள்ளனர். அதன்படி, ஒரு கடையில் 2 ஆண்டுகளாக வாடகை பாக்கியாக ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்து 670, மற்றொரு கடையில் 3 ஆண்டுகளாக ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்து 248 நகராட்சிக்கு செலுத்த வேண்டியுள்ளது. இந்த கடை வியாபாரிகளுக்கும் நோட்டீசு அளித்த நகராட்சி அதிகாரிகள், நாளைக்குள்(திங்கட்கிழமை) வாடகையை கட்டவில்லை என்றால் கடைக்கு சீல் வைப்பதாக எச்சரித்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.