புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
வருகிற 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. இதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் போலீசார் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் கர்நாடகாவில் இருந்து வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்கள், தடை செய்யப்பட்ட வெளி மாநில மதுபாட்டில்கள் எதுவும் வாகனத்தில் ஏற்றி செல்லப்படுகிறதா? என்று கண்காணித்தனர். மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகள், மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளான ஓசூர் ஜுஜுவாடி, ஆந்திரமாநில எல்லையான காளிக்கோவில் சோதனைச்சாவடி உள்பட 11 சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை நடைபெற்றது. நாளை (திங்கட் கிழமை) வரை இந்த சோதனை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.