உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: வாழப்பாடியில் கண், வாயை பொத்தி விவசாயிகள் நூதன போராட்டம்

வாழப்பாடியில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நேற்று கண், வாயை பொத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-29 22:30 GMT
வாழப்பாடி, 

சேலம் மாவட்டம் வாழப்பாடி சேசன்சாவடியில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று 13-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த 23-ந் தேதியில் இருந்து நேற்று 7-வது நாளாக, விவசாயிகள் சிலர் உண்ணாவிரத போராட்டத்திலும் பங்கேற்றனர். இதனிடையே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென்று கண், வாயை பொத்திக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே நேற்று விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவிக்க கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வந்தார். ஆனால் அவரை அங்கு செல்ல வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அனுமதி மறுத்து தடுத்து விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், போலீசாரின் அனுமதிபெற்று போராட்டத்தில் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் பேசும்போது, தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு கண்டு கொள்ளாதது மிகவும் வேதனை அளிக்கிறது. போராட்டத்தை முடக்குவதற்கான முயற்சியை அரசு கைவிட வேண்டும். விளைநிலங்கள் பாதிக்காத வகையில், அண்டை மாநிலங்களை போல, தமிழகத்திலும் சாலையோரத்தில் பூமிக்கு அடியில் மின்சார கேபிளை பதித்து மின்சாரத்தை கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். விவசாயிகளின் கருத்துகளை கேட்க விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.

போராட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் சேகர், விஜயகுமார், குமரவடிவேல், செந்தில், வாழப்பாடி மகாலிங்கம் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘விளைநிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்வதை கண்டித்து தொடர் போராட்டத்திலும், உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறோம். இந்த போராட்டத்தை நாளை (இன்று) முதல் நிறுத்திக்கொள்ள உள்ளோம். மேலும் வருகிற 3-ந் தேதி 13 மாவட்ட விவசாயிகள் சென்னை சென்று, சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கிறோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்