விழுப்புரம்-புதுச்சேரி இடையே கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் - கோட்ட மேலாளர் பேட்டி
விழுப்புரம்- புதுச்சேரி இடையே விரைவில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என்று கோட்ட மேலாளர் உதயகுமார் கூறினார்.
விழுப்புரம்,
திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் நேற்று காலை விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார். அவர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, பணிகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் தார் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடிக்கும்படியும், தரமான முறையில் சாலை அமைக்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து, ரெயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் இருந்த அரசியல் கட்சி விளம்பர பதாகைகள், தேவையற்ற இரும்புக்கம்பிகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு ரெயில் நிலைய முகப்பு தோற்றத்தை அழகுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து கோட்ட மேலாளர் உதயகுமார், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூடுதல் ரெயில்கள்
விழுப்புரம், புதுச்சேரி ஆகிய ரெயில் நிலையங்களில் உள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம்- புதுச்சேரி இடையே யூனிட் ரெயில் இயக்க முடிவு செய்துள்ளோம். ஆனால் யூனிட் ரெயில் இயக்குவதற்கு வில்லியனூர், வளவனூர் ஆகிய இடங்களில் கிராசிங் நிலையம் ஏற்படுத்தினால்தான் முடியும். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த பணிகள் நிறைவு பெற்ற பின்னர், விரைவில் விழுப்புரம்- புதுச்சேரி இடையே யூனிட் ரெயில் இயக்கப்படும்.
அதுமட்டுமின்றி இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க சில இடங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்ததும் ரெயிலின் வேகம் அதிகரிக்கப்படுவதோடு, கூடுதல் ரெயில்கள் இயக்கவும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.
விழுப்புரத்தில் இருந்து திருச்சிக்கும், சேலத்திற்கும் பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் அதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அப்பாதையில் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பயணிகளின் குறைகள், கோரிக்கைகளை அவ்வப்போது கேட்டறிந்து, அதற்கேற்ப விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள், அழகுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ரெயில் நிலையத்தை சுகாதாரமாக வைத்திருக்க பயணிகளும் அக்கறையுடன் செயல்பட்டு ரெயில்வே நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு ரூ.20 வசூலிப்பதாகவும், இருசக்கர வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை அழைத்து விசாரணை செய்யப்படும். அதே நேரத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது ரெயில்வே அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.