கோவில்பட்டியில் 708 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
கோவில்பட்டியில் 708 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை சார்பில், ஏழை பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி வரவேற்று பேசினார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மொத்தம் 708 ஏழை பெண்களுக்கு தலா ஒரு பவுன் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கினார். திருமண உதவித்தொகையாக பிளஸ்-2 படித்த 338 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், பட்டம் அல்லது டிப்ளமோ படித்த 370 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.
விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது கூறியதாவது:-
ஏழை பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இதேபோன்று தொட்டில் குழந்தை திட்டம், 2 பெண் குழந்தைகளுக்கு வைப்புத்தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் உதவித்தொகை, பிளஸ்-2 படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும், பட்டம் பெற்ற பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு ஒரு பவுன் தங்கம், ஏழை பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா, அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா குழந்தைநல பரிசு பெட்டகம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானியத்தில் ஸ்கூட்டர் என்று எண்ணற்ற திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார்.
மேலும் அவர் பள்ளி மாணவர்களுக்கு காலணி முதல் மடிக்கணினி வரையிலும் அனைத்தையும் இலவசமாக வழங்கினார். அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எனவே தமிழக அரசுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பெண்கள் மருத்துவம், சட்டம், காவல்துறை ஆகியவற்றின் உதவி பெறவும், உளவியல் ஆலோசனை பெறவும், மீட்பு மற்றும் தங்கும் வசதி பெறவும் ‘எங்கேயும் எப்போதும் 181‘ என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு புதிய காரினை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசனிடம் வழங்கினார்.
முன்னதாக கோவில்பட்டி 11-வது வார்டு பங்களா தெருவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.12 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர், கோவில்பட்டி 12-வது வார்டு பங்களா தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.33 லட்சத்து 20 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, தாசில்தார் பரமசிவன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மல்லிகா, கல்வி மாவட்ட அலுவலர் சீனிவாசன், தலைமை ஆசிரியை ராஜசரசுவதி,
முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சமூகநல விரிவாக்க அலுவலர் பாண்டிமதி நன்றி கூறினார்.
கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், கோடாங்கால் ஆகிய இடங்களில் ரூ.41 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ இயக்கி தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி, முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நாகராஜா, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.