தமிழகத்தில் 2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் 2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.

Update: 2018-12-29 22:45 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலியில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் “காசநோய் இல்லாத தமிழகம்-2025” என்ற பெயரில் ஒரு நாள் கருத்தரங்கினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்து, காசநோய் தடுப்பு சின்னத்தை அறிமுகப்படுத்தினார். காசநோய் தடுப்பு நடவடிக்கையில் நன்றாக செயல்பட்ட விருதுநகர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்த காசநோய் தடுப்பு பிரிவு தலைமை மருத்துவமனைக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் எப்படி போலியோ நோய் ஒழிக்கப்பட்டதோ அதேபோல், காசநோயை 2025-க்குள் ஒழிப்பதற்கான கருத்தரங்கம் தற்போது நடந்து வருகிறது.

இந்த கருத்தரங்கத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் காசநோயை கண்டுபிடிப்பதற்கான நடமாடும் எக்ஸ்ரே தொடங்கப்பட்டு, பொதுமக்களின் தேவைக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார நிறுவன துணை இயக்குனர் சவுமியா சுவாமிநாதன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், காஞ்சீபுரம் எஸ்.பி.மரகதம்குமரவேல், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆறுமுகம், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் எஸ்.குமரவேல், வடநெம்மேலி ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்