பிளாஸ்டிக் மாசு இல்லாத காஞ்சீபுரத்தை உருவாக்குவோம் கலெக்டர் பேச்சு

பிளாஸ்டிக் மாசு இல்லாத காஞ்சீபுரத்தை உருவாக்குவோம் என்று கலெக்டர் பொன்னையா கண்காட்சியை தொடங்கிவைத்து பேசினார்.;

Update: 2018-12-29 22:30 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு, பிளாஸ்டிக்குக்கு மாற்றுப்பொருள் கண்காட்சி மற்றும் பயிலரங்கம் நடந்தது. இதனை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:- ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருட்கள் குறித்து பொதுமக்கள், வணிகர்கள், அலுவலர்கள் உணவு விடுதியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இங்கு கண்காட்சி மற்றும் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாம் பிளாஸ்டிக்கை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்தாலும் கடந்த 30 முதல் 40 ஆண்டுகளில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு நமது பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் முக்கிய காரணம். தற்போது நாம் உணவு விடுதிகளில் சாப்பிடும் போதும், உணவு வாங்கி வரும் போதும் ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக்கை கையாளுவது எளிது என்பதால் அதிகம் பயன்படுத்துகிறோம்.

அவை தூக்கி வீசப்படும் போது அழியாத குப்பைகளாக சுகாதாரத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கிறது. முன்பு நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் போதும், பொருட்களை கடைகளில் வாங்கி வரும் போதும் துணிப்பை மற்றும் பாத்திரங்களை பயன்படுத்தினோம். தற்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் நாம் மட்டுமின்றி கால்நடைகள், நீர் வாழ்உயிரினங்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஆண்மை குறைவு, குழந்தையின்மை, புற்றுநோய், நரம்பு தளர்ச்சி, ஆஸ்துமா, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இந்த வகை பிளாஸ்டிக்குகளை எரிக்கும் போது உற்பத்தியாகும் பல்வேறு நச்சு வாயுக்கள் பொதுமக்களுக்கு கண் எரிச்சலையும், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.

நாம் வீட்டில் இருந்து குப்பைகளை அகற்றினால் போதும் என்ற மனநிலையில் தூக்கி எறியும் கழிவு பொருட்களில் பிளாஸ்டிக் எந்த அளவு கலந்துள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.

நாம் தூக்கி எறியும் வாழைப்பழத்தோல், காகிதப்பை, கிழிந்ததுணி, கம்பளி, மரப்பொருட்கள் உள்ளிட்டவை எளிதில் மக்கிவிடுகின்றன. ஆனால் பிளாஸ்டிக் மக்குவதற்கு 10 லட்சம் வருடங்களாகும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, சுகாதார பாதிப்பு ஏற்பட்டு ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்படுகிறது.

மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் ஒருமுறை உபயோகப்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த பயிலரங்கம் மற்றும் கண்காட்சி மூலம் வணிகர்கள் உள்ளிட்ட அனைவரும் பிளாஸ்டிக்குக்கு மாற்றுப்பொருட்கள் கண்டறிவது மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் எங்கெங்கு இந்த மாற்றுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பதை கேட்டறிந்து அவற்றை பயன்படுத்த வேண்டும். நமது மாவட்டத்தை சுற்றிலும் 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களை தயாரித்து வருகின்றனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் உள்ளவர்களை அணுகி அனைத்து விவரங்களையும் பெற்று பிளாஸ்டிக் மாசு இல்லாத காஞ்சீபுரத்தை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், உதவி மண்டல செயற்பொறியாளர் செங்கல்பட்டு மண்டலம் வி.முருகேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எம்.ஆனந்தன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜி.ராமராஜ், காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மகேந்திரன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்