தா.பழூர் அருகே வீடுகள் மீது அரசு சொகுசு பஸ் மோதல்; 3 பேர் காயம்
தா.பழூர் அருகே வீடுகள் மீது அரசு சொகுசு பஸ் மோதல்; 3 பேர் காயம். வீட்டின் முன் பகுதி சேதமடைந்தது.
ஜெயங்கொண்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை கிராமத்தை சேர்ந்தவர் வினோதன்(வயது 52). அரசு சொகுசு பஸ் டிரைவரான இவர், நேற்று அதிகாலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து அரசு சொகுசு பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சவூரை நோக்கி சென்று கொண்டு இருந்தார். தா.பழூர் அருகே மதனத்தூர் கிராமத்தில் கும்பகோணம்- ஜெயங்கொண்டம் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் அருகில் இருந்த முருகானந்தம்(36) என்பவரது வீட்டில் மோதி நின்றது. இதில் வீட்டின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
இதில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன. மேலும் அருகில் உள்ள செல்வராஜ் என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மொபட், ஜெயலட்சுமி(65) என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரும் இடிந்து சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த கரடிகுளம் மேலத்தெருவை சேர்ந்த கதிரவன்(35), கொடுக்கூர் குடிகாடு நடுத்தெருவை சேர்ந்த சம்பத்(30), அரசு பஸ் டிரைவர் வினோதன் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த 3 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற அரசு பஸ்சை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.