தமிழகத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் முட்டுக்கட்டை - எச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழகத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் முட்டுக்கட்டையாக உள்ளன என்று எச்.ராஜா பேசினார்.

Update: 2018-12-28 22:15 GMT
சிவகங்கை, 

சிவகங்கை நகர் பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய் பிறந்த தினவிழா பொதுக்கூட்டம் சிவகங்கையில் நகர் தலைவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். இளைஞரணி தலைவர் மயில்வாகணன் வரவேற்றார். இதில் கட்சியின் தேசிய செயலாளரான எச்.ராஜா பேசியதாவது:- தமிழகமும், தமிழகத்தில் உள்ள இளைஞர்களும் வளர்ச்சி பெறக் கூடாது என்று தி.மு.க.வும், அதனோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. மொத்தத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் எண்ணற்ற தமிழர்களை கொன்று குவிக்க உதவிய காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வை மக்கள் இன்னும் மறக்கவில்லை. வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் சந்தர்ப்பவாதத்திற்காக இன்னும் தி.மு.க.வில் உள்ளனர். தமிழகத்தில் ஆட்சி செய்த போது பல்வேறு ஊழல்களில் திளைத்த தி.மு.க., பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்திற்கு என்ன செய்தார் என கேள்வி கேட்பது வேதனையடைச் செய்கிறது.

கடந்த 4½ ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 8.5 கோடி பேருக்கு தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 4½ லட்சம் பேருக்கு இலவச வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 89 லட்சம் பேருக்கு வங்கியிலிருந்து கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவைதவிர, நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்துள்ளது.

பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எண்ணற்ற விவசாயிகள் பயிர்க்கடன் பெற்றுள்ளனர். ஆனால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் போன்றவர்கள் வங்கிகளை தங்களது சுயலாபத்திற்காக சுரண்டிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கும் முன்பே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள ப.சிதம்பரம் கைதாகக் கூடிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பொது செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் உதயா, இளைஞரணி செயலாளர் நாகேஸ்வரன் நகர துணைத் தலைவர் பிரபாகரன், இளைஞரணி செயலாளர் ராஜேஸ், துணைத் தலைவர் செந்தில், நகர் துணைத் தலைவர் சோனைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சரவணகுமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்