கூட்டணி அரசில் காங்கிரசார் பெரிய அண்ணன் போல் செயல்படுகிறார்கள் : மந்திரி எச்.டி.ரேவண்ணா பரபரப்பு குற்றச்சாட்டு

கூட்டணி அரசில் காங்கிரசார் பெரிய அண்ணனை போல் செயல்படுகிறார்கள் என்றும், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் மந்திரி எச்.டி.ரேவண்ணா பரபரப்பு தகவலை கூறி இருக்கிறார்.

Update: 2018-12-28 23:49 GMT
பெங்களூரு,

கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணன்-தம்பிகள் (எச்.டி.ரேவண்ணா-குமாரசாமி) பிற மந்திரிகளின் துறைகளில் தலையிடுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின்றன. இது சில காங்கிரஸ் தலைவர்கள் மூலம் ஊடகங்களுக்கு செல்கின்றன. அவர்கள் யார் என்பது எனக்கு தெரியும். இதற்கெல்லாம் பயப்படமாட்டோம்.

காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளாவிட்டால், ஒரு நாள் அவர்கள் அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள். சில காங்கிரஸ் தலைவர்களின் செயல்களால், அக்கட்சிக்கு கர்நாடகத்தில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்-மந்திரி குமாரசாமி ஒரு எல்லை வரை எல்லாவற்றையும் சகித்துக்கொள்வார். எத்தனை நாட்கள் சகித்துக்கொள்வது?. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. கூட்டணி அரசில் காங்கிரசார் பெரிய அண்ணன் போல் செயல்படுகிறார்கள்.

போலீஸ் துறையில் ஒரு சாதாரண காவலருக்கு கூட பணி இடமாற்றம் கேட்டு பரிந்துரை செய்யவில்லை. ஆனாலும் என் மீது குறை சொல்கிறார்கள். துணை முதல்-மந்திரி பரமேஸ்வரின் நிலை என்ன என்பது எனக்கு தெரியும்.

ஆதிதிராவிட சமுதாயத்தின் தலைவராக இருக்கும் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரி பதவியில் இருக்க காங்கிரசார் விரும்பவில்லை. போலீஸ் இலாகாவை அவரிடம் இருந்து பறித்து இருக்கக்கூடாது. அவ்வாறு பறித்தது சரியல்ல.

நான் பிற துறைகளின் செயல்பாடுகளில் தலையிடுவதே இல்லை. எனக்கு அந்த அவசியமும் இல்லை. பொதுப்பணித்துறையில் சாலை மேம்பாட்டு வாரியத்திற்கு காங்கிரஸ் பிரமுகரை தலைவராக நியமித்தது பற்றி எனக்கு தெரியாது. எங்கள் கட்சியில் மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்கள் ஆலோசித்து முடிவு எடுத்திருப்பார்கள்.

இவ்வாறு எச்.டி.ரேவண்ணா கூறினார்.

மேலும் செய்திகள்