கல்லக்குடி பழங்காநத்தம் அருகே மொபட் மீது பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது - அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு

கல்லக்குடி பழங்காநத்தம் அருகே மொபட் மீது பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Update: 2018-12-28 22:44 GMT
திருச்சி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி நேற்று காலை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில் திருச்சி மாவட்ட எல்லைப்பகுதியில் கல்லக்குடி பழங்காநத்தம்-கல்லகத்திற்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே தண்டவாளத்தை மொபட்டில் முதியவர் ஒருவர் கடக்க முயன்றார். அந்த நேரத்தில் ரெயில் வருவதை கண்டதும் அவர் மொபட்டை தண்டவாளத்தில் போட்டு விட்டு தப்பியோடினார். இதனால் ரெயில், மொபட் மீது பயங்கரமாக மோதியது.

என்ஜினின் முகப்பு கீழ் பகுதியில் மொபட் சிக்கியது. ரெயில் என்ஜின் டிரைவர் சுதாரித்து உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தினார். ரெயில் சிறிது தூரம் தள்ளி நின்றது.

ரெயில் திடீரென நடுவழியில் நின்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மொபட் மீது ரெயில் மோதிய சம்பவம் தொடர்பாக ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் உதவி டிரைவர் உடனடியாக அரியலூர் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும், ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் என்ஜினின் கீழ்பகுதியில் சிக்கிய மொபட்டை மீட்டனர்.

அந்த மொபட்டின் வாகன பதிவெண்ணை வைத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். இதில் அந்த மொபட் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழரசூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 59) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடிப்பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ரெயில் தடம்புரளாமல் தப்பியது. இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே ரெயில் சிறிது நேர தாமதத்திற்கு பிறகு சென்னை புறப்பட்டு சென்றது.

ரெயில் வருகிற நேரத்தில் தண்டவாளத்தை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல வேண்டாம் எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பயணிகளின் பாதுகாப்புக்கு ஒத்துழைக்குமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்