சோழத்தரம் சப்-இன்ஸ்பெக்டர் மருமகள் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
சோழத்தரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மருமகள் இறந்த வழக்கில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் செல்வகுமார்(வயது 29). இவருக்கும், நாகை மாவட்டம் வக்காரமாரி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகள் அனுசியா(23) என்பவருக்கும் கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது அனுசியா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த 26-ந் தேதி இரவு வீட்டுக்கு வந்த செல்வகுமார், தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டார். ஆனால் அவர் சாப்பாடு கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் செல்வகுமார், ஒரு அறையில் படுத்து தூங்கினார். இதனால் மனமுடைந்த அனுசியா இரவு 11 மணியளவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த செல்வகுமார், அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அனுசியாவின் தாய் தமிழரசி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக செல்வகுமார் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன் விசாரணை நடத்தி வருகிறார்.