புயல் நிவாரண தொகையை கையாடல் செய்தவர்களை கண்டித்து, சாலையின் குறுக்கே மரத்துண்டுகளை போட்டு பொது மக்கள் மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

புயல் நிவாரண தொகையை கையாடல் செய்தவர்களை கண்டித்து சாலையின் குறுக்கே மரத்துண்டுகளை போட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் கோட்டூர் அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update:2018-12-29 04:15 IST
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள ஓவர்ச்சேரி கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய நிவாரண தொகையை போலி முகவரி கொடுத்து கையாடல் செய்த 30-க்கும் மேற்பட்டவர்களையும், அதற்கு துணையாக செயல்பட்ட அரசு அதிகாரிகளையும் கண்டிப்பதோடு, தவறு செய்தவர்கள் மீது மாவட்ட கலெக்டர் விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, நேற்று ஓவர்ச்சேரி இளைஞர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் ஆதிச்சபுரம் பாலம் பஸ் நிறுத்தத்தில் சாலையின் குறுக்கே மரத்துண்டுகளை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன், வருவாய் ஆய்வாளர் லீலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஏற்பட்ட உடன்பாட்டால் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் நடந்த இடத்தின் அருகில் கிராம மக்கள் ஒரு விளம்பர பலகையை வைத்திருந்தனர். இதனால் மறியலில் ஈடுபட்ட இளைஞர்களுடன், போலீசார் வாக்குவாதம் செய்தனர்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி கீழக்குடியிருப்பு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டு 43 நாட்கள் ஆகியும் மின்சாரம் வழங்கவில்லை. ஆதலால் உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று கொக்கலாடி கீழக்குடியிருப்பில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணா, ராஜேந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சென்னை-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்