அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2018-12-28 22:00 GMT
விருதுநகர், 


விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயம், பொதுப்பணி, வருவாய், வனத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

பெரும்பாலும் மானாவாரி விவசாயத்தை நம்பியுள்ள விருதுநகர் மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிடுவதால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் எனவே இம்மாவட்டம் வளமிக்க மாவட்டமாக மாற அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

பம்பை, அச்சன் கோவில் ஆறுகளையும் 6 சிற்றாறுகளையும் இணைத்து இத்திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிடம் முறையிட்ட போது அவர் அதை ஏற்றுக்கொண்ட நிலையில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யாததால் இத்திட்டம் நிறைவேறாமல் இருப்பதாக தெரிவித்த விவசாயிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதுதொடர்பான மனுவை தமிழ்நாடு விவசாய சங்கதலைவர் விஜய முருகன், தமிழக விவசாய சங்க தலைவர் ராமசந்திர ராஜா, தென்னை விவசாய சங்க தலைவர் முத்தையா ஆகியோர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் வழங்கினர். அவர் அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார்.

படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய பின்பு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்த நிலையில் விவசாய துறையினர் மக்காச்சோளத்திற்கு படைப்புழுவால் 35 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த விவசாய துறையினர் இழப்பீடு பெறுவதற்கு 33 சதவீத பாதிப்பே போதுமானது என்றும் 35 சதவீத பாதிப்பு என்று குறிப்பிட்டுள்ளதால் இழப்பீடு பெறுவதில் பிரச்சினை ஏதும் இருக்காது என்று தெரிவித்தனர். மேலும் தென்னையில் இருந்து நீரா பானம் தயாரிப்பதற்கு விவசாயிகளை கொச்சிக்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

மேலும் வறட்சி மற்றும் பூச்சிகள் படையெடுப்பால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நகைக்கடன் உள்ளிட்ட விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டன. 

மேலும் செய்திகள்