கரூர்-சேலம் இடையே மின்மயமாக்கல் பணிகள் நிறைவு: சோதனை ரெயிலை இயக்கி பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
கரூர்-சேலம் இடையே மின்மயமாக்கல் பணிகள் நிறைவுற்றது. இதைத்தொடர்ந்து அந்த வழித்தடத்தில் சோதனை ரெயிலை இயக்கி பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கரூர்,
கரூர்-சேலம் இடையே 85 கிலோ மீட்டர் தூரம் அகல ரெயில்பாதையில் டீசல் என்ஜின்களால் ரெயில்கள் இயக்கம் நடந்தன. இந்த நிலையில் டீசல் சிக்கனம், சுற்று சூழலை மேம்படுத்தும் பொருட்டு காற்று மாசுபடுதலை தடுப்பது உள்ளிட்டவற்றுக்காக, ரூ.90 கோடி மதிப்பீட்டில் கரூர்-சேலம் ரெயில்பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அந்த பணிகள் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து பெங்களூரில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், முதன்மை மின்பொறியாளர் உதயகுமார், திட்ட இயக்குனர் நாகேந்திர பிரசாத் மற்றும் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று கரூருக்கு வருகை தந்தனர். பின்னர் அவர்கள் கரூர்-சேலம் மின்மயமாக்கல் பணிகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா? என பார்த்து சரி செய்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த வழித்தடத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ரெயிலை இயக்கி ஆய்வு செய்தனர். கரூர் ரெயில் நிலையத்திலிருந்து அந்த ரெயில் மதியம் 1 மணியளவில் புறப்பட தயாரானபோது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அந்த ரெயில் கரூரிலிருந்து நாமக்கல் வழியாக சேலத்தினை சென்றடைந்தது. அப்போது புதிய மின்பாதையில் ரெயில் சீராக செல்கிறதா? என்பன உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து குறிப்பெடுத்து கொண்டனர். பின்னர் இதனை அறிக்கையாக தென்னக ரெயில்வே சென்னை அலுவலகத்தில் சமர்பித்து, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு விரைவில் வழக்கமான ரெயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர்-சேலம் இடையே 25 ஆயிரம் வோல்ட் அளவீட்டில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே ரெயில்பெட்டி மீது ஏறி நின்று கொண்டு செல்பி எடுப்பதோ? அல்லது ரெயில்பெட்டியில் ஏறி பயணிப்பதோ? ஆபத்தான விளைவினை ஏற்படுத்தும். எனவே இது போன்ற செயல்களில் பயணிகள் உள்ளிட்டோர் ஈடுபட கூடாது. சோதனை ரெயில் ஓட்டத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கினோம். ஆனால் மற்ற ரெயில்கள் வழக்கமான வேகத்தில் இயக்கப்படும். ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டதால் கரூர்-சேலம் இடையே பயண நேரம் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.