நிவாரண பொருட்கள் கேட்டு சாலை மறியல் செய்த பெண்கள் உள்பட 220 பேர் கைது

நிவாரண பொருட்கள் கேட்டு சாலை மறியல் செய்த பெண்கள் உள்பட 220 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-28 21:45 GMT
அரிமளம், 


கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். நிலைமை படிப்படியாக சீரடைந்து வந்தாலும் அரசின் நிவாரண பொருட்கள் இன்னும் பொதுமக்களை சென்றடையவில்லை. இதனால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அரிமளம் ஒன்றியம் தேக்காட்டூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக நிவாரணம் கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருமயம் தாசில்தார் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். ஆனால், ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், நிவாரண பொருட்கள் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று புதுக்கோட்டை-மதுரை நெடுஞ் சாலையில் நமணசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். புயலால் பாதிப்பு அடையாத வசதி உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. நமணசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இடைத்தரகர்கள் அதிகம் உள்ளளர். அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு நிவாரண பொருட்களை பெற்று கொடுத்து வருகின்றனர். எங்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், நமணசமுத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில், உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் சாலை மறியல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். ஆனால், பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், பெண்கள் உள்பட 220 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி, திருமயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மறியல் காரணமாக புதுக்கோட்டை-மதுரை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்