கடலூர் துறைமுகம் அருகே உப்பனாற்றில் மூழ்கி மீனவர் பலி

கடலூர் துறைமுகம் அருகே உப்பனாற்றில் மூழ்கி மீனவர் பலியானார்.

Update: 2018-12-28 22:15 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகம் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குப்புராஜ். இவருடைய மகன் வேந்தன்(வயது 38), மீனவர். சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள உப்பனாற்றின் பாலத்தில் இருந்து ஆற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக பாலத்தில் இருந்து தவறி உப்பனாற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கினார்.

இதுபற்றி அறிந்த அவரது உறவினர்கள், துறைமுக போலீசார் மற்றும் கடலூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய வேந்தனை தேடிவந்தனர். நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இருள் சூழ்ந்ததால், தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் நிறுத்திவிட்டு சென்றனர்.

இதற்கிடையே நேற்று காலையில் அப்பகுதியில் வேந்தனின் உடல் கரை ஒதுங்கியது. அங்கு சென்ற உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து வேந்தனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்