சிதம்பரத்தில் துணிகரம் அடுக்கு மாடி குடியிருப்பில் 2 வீடுகளில் கதவை உடைத்து நகை கொள்ளை - மர்ம மனிதர்கள் கைவரிசை
சிதம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளில் கதவை உடைத்து நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள சரஸ்வதி நகரில் 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் தரைதளத்தில் உள்ள ஒரு வீட்டில் ராஜேந்திரன் மகன் சந்திரமோகன் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சந்திரமோகனின் மனைவிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதையடுத்து அவரை அழைத்துக்கொண்டு சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சந்திரமோகனின் மனைவி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இரவு முழுவதும் சிகிச்சை பெற்றார். இதனால் சந்திரமோகனும் அவருடனே மருத்துவமனையில் இருந்தார்.
நேற்று காலை 7 மணிக்கு சந்திரமோகன் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் , வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 3½ பவுன் நகையையும் காணவில்லை. மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதேபோல் அதே குடியிருப்பில் 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருபவர் பாஸ்கர்(வயது 55). ஆட்டோ டிரைவர். இவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். நேற்று காலை வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைத்த நிலையில் கிடந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 2½ பவுன் நகை கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து புகார்களின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அடுக்கு மாடி குடியிருப்பில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்து இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.