கோவை ஒண்டிப்புதூரில், உருட்டுக்கட்டையால் அடித்து தொழிலாளி கொலை - 2 பேரிடம் விசாரணை

கோவை ஒண்டிப் புதூரில் தொழிலாளி உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;

Update:2018-12-29 03:45 IST
சிங்காநல்லூர்,

கோவை ஒண்டிப்புதூர் மேம்பாலத்துக்கு கீழ் நேற்று காலை ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இதில், கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவரின் அருகே உருட்டுக்கட்டைகள் கிடந்தன. இதனால் அவரை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்த வாலிபர் யார்?. எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தினார்கள். இதில், பிணமாக கிடந்தவர் கோவை ஒண்டிப்புதூரை அடுத்த காமாட்சிபுரம் கம்போடியா தெருவில் வசிக்கும் ரத்தினசாமி (வயது 36) என்பது தெரியவந்தது. இவர் அங்குள்ளலேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. இவருக்கு சுமா (26) என்ற மனைவியும், திக்சா (3) என்ற மகளும் உள்ளனர்.

ரத்தினசாமிக்கு குடிப்பழக்கம் உள்ளதால் நேற்று முன்தினம் இரவு அவர் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்திருக்கலாம். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரத்தினசாமி உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே ரத்தினசாமியுடன் யார்-யார் சேர்ந்து மது குடித்தார்கள்? அதில் தலைமறைவாக உள்ளது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஒண்டிப்புதூர் மேம்பாலத்திற்கு அருகே உள்ள நெசவாளர் காலனி முழுவதும் மோப்பநாய் சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது குறித்து போலீசார் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அதன் முடிவில் தான் ரத்தினசாமியை கொலை செய்தது யார்? என்பது தெரியவரும்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

கொலை நடந்த ஒண்டிப் புதூர் மேம்பாலத்தின் கீழே உள்ள பகுதியில் இரவில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அங்கு ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. ஆனால் போதிய தெரு விளக்குகள் கிடையாது.

இதனால் அந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே போலீசார் இந்த பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து செல்ல வேண்டும். மக்கள் நடமாட்டம் இருக்கும் போதே இரவு 9 மணியளவில் சிலர் அந்த பகுதியில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். போலீசார் முறையாக ரோந்து சென்றால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்