12-வது நாளாக விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தெரிவிக்க வந்த அரசியல் கட்சியினர் 6 பேர் கைது உண்ணாவிரதம் இருந்தவர்கள் மயங்கியதால் பரபரப்பு
ஈரோட்டில் 12-வது நாளாக நடந்து வரும் காத்திருப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த அரசியல் கட்சியினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் உண்ணாவிரதத்தில் இருந்தவர்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால் விவசாயிகளும், விவசாய நிலமும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக உயர் மின்கோபுர எதிர்ப்பு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. கடந்த 17-ந் தேதி ஈரோடு உள்பட 8 இடங்களில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இதில் அந்தந்த பகுதிகளில் பாதிக்கப்படும் விவசாயிகள் கலந்து கொண்டு அறவழியில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு அளித்து வந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்கள் வழியாக போடப்படும் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு அருகே உள்ள மூலக்கரை பகுதியில் 17-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக தினமும் சுமார் 500 ஆண்- பெண் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு அளித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் உண்ணாவிரத போராட்டமாக மாறியது. 5 ஆண்களும், 6 பெண்களும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் போராட்டக்களம் சூடுபிடித்தது. விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த 27-ந் தேதி பல்வேறு அரசியல் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அன்று மாலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து, இந்த பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் பேசுவதாகவும் அறிவித்தார்.
இதற்கிடையே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் திடீர் மயக்கம் அடைந்தனர். உடனடியாக அங்கேயே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கதிரம்பட்டி எளையாம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி என்பவருடைய மனைவி கஸ்தூரி (வயது 43) என்பவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் 12-வது நாள் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. உண்ணாவிரத போராட்டத்தை 5 ஆண்களும், 5 பெண்களும் தொடர்ந்தனர். அதுபோல் போராட்டத்தில் வழக்கமாக கலந்து கொள்ளும் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஆதரவு அளிக்கும் விவசாயிகள் வரத்தொடங்கினார்கள்.
ஆனால் வழக்கத்தைவிட நேற்று போராட்ட பந்தல் செல்லும் வழியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், முருகையன், முருகன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பணியில் இருந்தனர்.
அவர்கள் போராட்ட பந்தலுக்கு, பாதிக்கப்பட்ட விவசாயிகளை மட்டுமே அனுமதித்தனர். ஆதரவு அளித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும் நேற்று உள்ளே விடவில்லை. இதுபோல் அரசியல் கட்சியினரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்துக்காக வந்த விவசாயிகள் போராட்ட பந்தல் நுழைவு வாயில் பகுதியிலேயே நின்று கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வந்தனர். ஆனால் அவர்களை போலீசார் உள்ளே விடவில்லை. மேலும், அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். லுக்மானுல் ஹக்கீம் மற்றும் உடன் வந்த குறிஞ்சி பாட்ஷா, சபீர் அகமது, அப்துல்ரகுமான் ஆகியோர் மேட்டுக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுபோல் ஆதரவு அளிக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதர் சங்க பெருந்துறை தாலுகா தலைவர் பங்கஜம், செயலாளர் ஜெயலட்சுமி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நேற்று மாலை 4 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையே உண்ணாவிரதம் இருந்தவர்கள், நேற்று காலையில் இருந்தே கடுமையாக பாதிப்புக்கு உள்ளானார்கள். நேற்றுக்காலை உண்ணாவிரதத்தில் இருந்த சரோஜா, கிருஷ்ணவேணி, ஜெயம்மா, கமலா, கோவிந்தராஜ், பழனிச்சாமி ஆகிய 6 பேர் மயக்கம் அடைந்தனர். இது போராட்ட பந்தலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு 6 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பகல் 1 மணி அளவில் செல்வராஜ், பூபதி, குமரேஷ், கிருஷ்ணவேணி ஆகிய 4 பேரும் மயக்கம் அடைந்தனர். உடனடியாக அவர்களும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் மூலம் முதலில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய 11 பேரும் உடல்நிலை பாதிப்பால் வெளியேறினார்கள்.
அவர்களுக்கு பதிலாக புதிதாக 8 பேர் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.
இதனால் போராட்டக்களம் மாறி மாறி பரபரப்பும், சோர்வும், சுறுசுறுப்பும் அடைந்த வண்ணமாக இருந்தது. பிற்பகலில் ம.தி.மு.க. பொருளாளர் அ.கணேசமூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து மீட்புக்குழு உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி.ராஜன் ஆகியோர் போராட்ட பந்தலுக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி பெற்று போராட்டக்குழுவினரை சந்தித்து பேசினார்கள்.
இதுபோல் மாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் துரைமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் போராட்ட பந்தலுக்கு வந்து விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.
நேற்று போராட்ட களம் முற்றிலும் பரபரப்பாகவே காணப்பட்டது.