பிளாஸ்டிக் தடையை நீக்கக்கோரி 300 கடைகள், 100 நிறுவனங்களை அடைத்து போராட்டம்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சேலம் மாவட்டத்தில் 300 கடைகள், 100 நிறுவனங்களை அடைத்து அதன் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
மறுசுழற்சி செய்யமுடியாத, ஒரு முறையே பயன்படுத்தப்படும் “பிளாஸ்டிக்”பைகள் உள்ளிட்ட பொருட்களை வருகிற 1-ந்தேதி முதல் பயன்படுத்த தடை விதித்து, தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையின்படி, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது. தமிழக அரசு பிறப்பித்த இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்தநிலையில், சேலம் மாவட்ட பிளாஸ்டிக் விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில், சங்க தலைவர் உத்தம் ஜெயின்சிங், செயலாளர் தருண் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது, பிளாஸ்டிக் பைகளுக்கான தடையை நீக்கும் வரை 28-ந் தேதி (நேற்று) முதல் மாவட்டத்தில் உள்ள பிளாஸ்டிக் கடைகள், நிறுவனங்களை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் 300 கடைகள் மற்றும் 100 உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை அடைக்கப்பட்டன. இதனால் அந்த கடைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.
சேலம் மாநகரில் வர்த்தக கேந்திரமாக விளங்கும் செவ்வாய்பேட்டையில் பிளாஸ்டிக் பைகள், பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை அடைத்து அதன் உரிமையாளர்கள், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், தமிழகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள், தம்ளர்கள் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கியில் கடன் பெற்று இந்த தொழிலை நடத்தி வருகிறோம். வருகிற 2020-ம் ஆண்டு வரை பிளாஸ்டிக் பைகள், தம்ளர்கள் போன்ற பொருட்களை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அதற்குள் நாங்கள் வேறு தொழிலுக்கு சென்றுவிடுவோம். பிளாஸ்டிக் தடையை நீக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும், என்றனர்.