சிவகிரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

சிவகிரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-28 22:00 GMT
சிவகிரி, 

சிவகிரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடை 

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே ராயகிரி நகரப்பஞ்சாயத்து தெற்கு சத்திரம்– வடுகப்பட்டி இடையே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கடந்த 24–ந் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்தனர். டாஸ்மாக் கடையை அந்த இடத்தில் இருந்து அகற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்து உள்ளனர்.

மேலும் இந்த போராட்டத்தையொட்டி அப்பகுதி மக்கள் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக நேற்று காலை பேரணியாக புறப்பட இருந்தனர். இதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

உண்ணாவிரதம் 

ஆகவே இதனை கண்டிக்கும் வகையிலும், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் தங்களது வாயில் கருப்பு துணி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் டாஸ்மாக் கடையை அகற்றும் வரை தொடர் உண்ணாவிரதம் இருப்போம் என தெரிவித்து நேற்று முதல் 100–க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 5–வது நாளாக நீடித்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்