நெல்லையில் மனித உரிமை மீறல் வழக்குகள்; நீதிபதி நேரில் விசாரணை
நெல்லையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று நேரில் விசாரித்தார்.
நெல்லை,
நெல்லையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று நேரில் விசாரித்தார்.
மனித உரிமை வழக்குகள்
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அளித்த புகார்கள் தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்துவதற்காக மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் நெல்லைக்கு வந்தார்.
அவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நேற்று விசாரணை நடத்தினார். மொத்தம் 53 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த வழக்குகளில் புகார் அளித்தவர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ் அதிகாரிகள், பிற அரசு துறை அதிகாரிகள் ஆஜரானார்கள். பின்னர் இந்த வழக்குகளின் விசாரணை வருகிற மார்ச் மாதம் 15-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சோபியா வழக்கு
இதில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தபோது, பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோஷம் போட்டதாக கூறப்படும் பிரச்சினையில் தூத்துக்குடியை சேர்ந்த மாணவி சோபியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சோபியா சார்பில் மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சோபியா சார்பில் வக்கீல்கள் ராமச்சந்திரன், சந்தனகுமார் ஆகியோர் ஆஜராகினர். சோபியா தரப்பில், சம்பவத்தன்று விசாரணை நடத்திய மேலும் 3 போலீஸ் அதிகாரிகளையும் இந்த வழக்கில் சேர்க்குமாறு ஏற்கனவே மனுதாக்கல் செய்திருந்தனர். அதுதொடர்பாக விசாரணை நடைபெற்றது.