உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்

உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம் செய்தார். மேலும் அவர் விசுவேஸ்வர தீர்த்த சுவாமியின் குரு வந்தனா விழாவிலும் பங்கேற்றார்.

Update: 2018-12-28 00:03 GMT
மங்களூரு,

ஜனாதிபதி வருகையையொட்டி உடுப்பியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பெஜாவர் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்த சுவாமி சன்னியாசம் பெற்று 80 ஆண்டுகள் ஆகிறது. 87 வயதான விசுவேஸ்வர தீர்த்த சுவாமி, கடந்த 1931-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந்தேதி பிறந்தார். இவர் தனது 7-வது வயதில் அதாவது கடந்த 1938-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி சன்னியாசம் மேற்கொண்டார். இவர் பெஜாவர் மடத்தின் 33-வது மடாதிபதி ஆவார். இந்த நிலையில் விசுவேஸ்வர தீர்த்த சுவாமி சன்னியாசம் பெற்று 80-வது ஆண்டு ஆவதையொட்டி குரு வந்தனா விழா நேற்று உடுப்பியில் நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தனி விமானம் மூலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவரை கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா, தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு மந்திரி யு.டி.காதர், கலெக்டர் சசிகாந்த் செந்தில், மேயர் பாஸ்கர் மொய்லி ஆகியோர் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். ராம்நாத் கோவிந்துடன் அவருடைய மனைவி சவிதா கோவிந்தும் வந்திருந்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உடுப்பிக்கு சென்றார். உடுப்பி ஹெலிபேட் மைதானத்தில் வந்திறங்கிய அவரை, உடுப்பி மாவட்ட பொறுப்பு மந்திரி ஜெயமாலா, கலெக்டர் பிரியங்கா மேரி பிரான்சிஸ், எம்.எல்.ஏ.க்கள் கோட்டா சீனிவாசபூஜாரி, ரகுபதி பட் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து கார் மூலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றார். அவருடன் கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா, நாகலாந்து கவர்னர் பி.பி.ஆச்சார்யா ஆகியோரும் சென்றனர். உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், ராம்நாத் கோவிந்துக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது மனைவியுடன் உடுப்பி கிருஷ்ணனை தரிசனம் செய்தார். மேலும் சிறப்பு பூஜையும் செய்தார்.

அதன்பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கிருந்து பெஜாவர் மடத்திற்கு சென்று மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்த சுவாமியிடம் ஆசி பெற்றார். இதையடுத்து அவர், விசுவேஸ்வர தீர்த்த சுவாமியின் ஆண்டு விழாவிலும் கலந்துெகாண்டார். அப்போது அவர், சன்னியாசம் பெற்று 80-வது ஆண்டை கொண்டாடும் விசுவேஸ்வர தீர்த்த சுவாமிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து, விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பெஜாவர் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்த சுவாமி, நினைவு பரிசு கொடுத்து கவுரவித்தார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி நேற்று உடுப்பி நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்குள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் பாதுகாப்பு கருதி, அங்குள்ள ரத வீதி உள்பட 4 வீதிகளிலும் கடைகளை அடைக்க போலீசார் உத்தரவிட்டிருந்தனர். மேலும் அங்கு போக்கு வரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது.

உடுப்பி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஏ.டி.ஜி.பி. கமல்பந்த், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அருண் சக்கரவர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு லட்சுமண் நிம்பர்கி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமாரசந்திரா ஆகியோர் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தது.

மேலும் செய்திகள்