காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருமகள் மர்ம சாவு - கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

காட்டுமன்னார் கோவில் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருமகள் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2018-12-27 22:15 GMT
காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் செல்வகுமார்(வயது 29). பி.எட். பட்டதாரி. இவரது மனைவி அனுசியா(23). எம்.ஏ. படித்துள்ளார். திருமணமாகி 8 மாதம் ஆகிறது. தற்போது அனுசியா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில், அனுசியாவிடம் செல்வகுமார் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில், அனுசியா நாகை மாவட்டம் வக்காரமாரி கிராமத்தில் உள்ள அவரது தந்தை செல்வராஜ் வீட்டுக்கு சென்றார். இதன் பின்னர் இரு குடும்பத்தினரும் பேசி சமாதானம் செய்து கொண்டதை அடுத்து, அனுசியா தனது கணவர் வீட்டுக்கு மீண்டும் வந்தார்.

இருப்பினும் செல்வகுமார் தொடர்ந்து அவரிடம் நகை கேட்டு கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்வகுமாரின் தாய்க்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால், அவரை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு மூர்த்தி அழைத்து சென்றார். வீட்டில் செல்வகுமார், அனுசியா மட்டும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இரவு 11 மணியளவில் அனுசியா வீட்டு ஹாலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, செல்வகுமார் அவரது தந்தை மூர்த்தியிடம் செல்போன் மூலம் தெரிவித்தார்.

இதுபற்றி மூர்த்தி செல்வராஜிக்கு போன் செய்து, உங்களது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பழஞ்சநல்லூர் கிராமத்திற்கு விரைந்தனர். அங்கு வீட்டில் அனுசியா பிணமாக கிடப்பதை பார்த்து, அவர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் தலைமையில் காட்டுமன்னார்கோவில் போலீசார் விரைந்து சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது அனுசியாவின் கணவர் செல்வகுமார் சம்பவ இடத்தில் இல்லை. அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. தொடர்ந்து அனுசியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

நேற்று காலை, அனுசியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அப்போது அனுசியாவின் சாவில் சந்தேகம் உள்ளது, அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம், இந்த பிரச்சினையில் போலீசார் ஒருதலைபட்சமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனவே இதில் உரிய விசாரணை நடத்தி, அவரது சாவுக்கு காரணமான செல்வகுமாரை கைது செய்திட வேண்டும் என்று கூறி மருத்துவமனை முன்பு சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னர், அதனடிப்படையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அனுசியாவின் தாய் தமிழரசி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனுசியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் செல்வகுமாரை பிடித்தால் தான் உண்மை நிலை தெரியவரும் என்பதால், அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்