தனியார் நிதி நிறுவன முகவர் கடத்தல் - 6 பேர் கைது
தனியார் நிதி நிறுவன முகவரை கடத்திய பெண் சத்துணவு அமைப்பாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லல்,
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு சிவகங்கை பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் சார்பில் சிவகங்கை, கல்லல் ஆகிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பணத்தைக் கொண்டு கல்லல் அருகே 37 ஏக்கர் பரப்புடைய தோட்டத்தை அந்த நிறுவனம் சார்பில் வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் திடீரென நிதி நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி அந்த நிறுவனத்திற்கு முகவர்களாக செயல்பட்டு வந்த 6 பேருக்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராபர்ட் ராஜ் என்பவர் நிதி நிறுவனத்தின் நிலத்தை விற்பனை செய்ய பவர் (விற்பனை செய்ய அதிகாரம்) கொடுத்திருந்தார். அந்த 6 பேரில் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் ஒருவர் ஆவார்.
இந்த நிலையில் கல்லல் அருகே அனைத்திடல் பகுதியைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் பாக்கியமேரி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.25 லட்சம் வரை வசூலித்து அந்த நிதி நிறுவனத்திடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் நிலத்தை விற்பனை செய்யும் அதிகாரத்தில் பாக்கியமேரியை சேர்க்க வில்லையாம்.
இதனால் பாக்கியமேரி இது குறித்து முத்துகுமாரை சந்தித்து, தானும் அதிக அளவில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து நிதி நிறுவனத்தில் செலுத்தியுள்ளேன். எனவே தன்னையும் இந்த நிலத்தை விற்கும் அதிகாரத்தில் சேர்த்துக்கொள்ளும் படி கூறியுள்ளார். அப்போது, நான் மட்டும் முடிவு எடுக்க முடியாது, மற்ற 5 பேரிடமும் கலந்துதான் முடிவு எடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முத்துக்குமாரை பாக்கியமேரி மற்றும் சிலர் இளையான்குடி பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து முத்துக்குமாரின் மனைவி லதா கல்லல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் கடத்தப்பட்ட முத்துக்குமாரை மீட்டனர்.
மேலும் அவரை கடத்தியதாக இளந்தக்குடிப்பட்டியைச் சேர்ந்த திருப்பதி (வயது40), பனங்குடியைச் சேர்ந்த ராபர்ட்(45), காரைக்குடியைச் சேர்ந்த செழியன்(42) மற்றும் குருபால்(35), அரியக்குடியைச் சேர்ந்த மணிகண்டன்(32) உள்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பாக்கியமேரியை தேடி வருகின்றனர்.