2 பேரை கொன்ற யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
தாண்டிக்குடியில் 2 பேரை கொன்ற காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில், வேளாண் இணை இயக்குனர் மனோகர், தோட்டக்கலை துணை இயக்குனர் சீனிவாசன் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.
அப்போது விவசாயிகள் பேசும்போது, ‘கஜா’ புயலால் பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியில் தோட்டக்கலை பயிர்கள் அதிகமாக சேதமடைந்துள்ளன. அவற்றை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். கொடைக்கானலை போன்று மாவட்டம் முழுவதையும் புயல் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். வேடசந்தூர் பகுதியில் போதிய மழை இல்லாததால் நிலக்கடலை பயிர்கள் கருகி வருகின்றன. இதற்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து அதிகாரிகள் பேசும்போது, புயலால் பாதிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு பதிலாக விவசாயிகளுக்கு விதை, நாற்றுகள் வழங்கப்படும். மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட உளுந்து, வெங்காயம், பாசிப்பயறு பயிரிட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.3 கோடியே 76 லட்சம் காப்பீட்டு தொகை செலுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 54 விவசாயிகளின் வங்கி கணக்கு விவரங்கள் தவறாக இருந்ததால் பணம் திரும்பி வந்துவிட்டது. அந்த வங்கி கணக்கு விவரங்களை சரியாக பெற்று அவர்களுக்கும் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
இதற்கிடையே, தாண்டிக் குடி பகுதியில் விவசாய பயிர் களை காட்டுயானை ஒன்று சேதப்படுத்தி வருவதாகவும், அதனை விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த பகுதியில் இருந்து வந்திருந்த சுமார் 50 விவசாயிகள் மொத்தமாக எழுந்து நின்று புகார் தெரிவித்தனர். அப்போது, விவசாயிகள் கூச்சலிட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பீட்ரூட்டுடன் வந்த விவசாயி
மேலும் அவர்கள் கூறுகையில், தாண்டிக்குடி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக காட்டுயானை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. அந்த யானை தாக்கியதில் பெண் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். விளைநிலங்களுக்குள் யானை புகாமல் இருக்க அமைக்கப்பட்ட அகழி மிக சிறியதாக உள்ளது. இதனால், எளிதாக யானை உள்ளே வந்துவிடுகிறது. அதனை விரட்ட பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.
அப்போது வனத்துறை அதிகாரி பதிலளித்து பேசும்போது, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.
கூட்டத்துக்கு வந்திருந்த ஆயக்குடியை சேர்ந்த விவசாயி மதனகுருசாமி, ‘கஜா’ புயல் காரணமாக கொய்யா மரங்களில் நோய் தாக்கி உள்ளதாகவும், பீட்ரூட்டின் அளவு சிறியதாக உள்ளது எனக்கூறி அவற்றை கையில் எடுத்து காட்டினார். அதனை பார்வையிட்ட வேளாண் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதற்கிடையே, தாண்டிக் குடி விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும் வன அலுவலர் வித்யாவிடம் அளித்தனர். இதேபோல, தமிழர் தேசிய முன்னணி விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரப்பன் ஒரு மனு அளித்தார்.
அதில், கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வழியாக மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. வேடசந்தூர் தாலுகா மிகவும் வறட்சியான பகுதியாகும். எனவே, மழைக்காலத்தில் காவிரியில் அதிகமாக தண்ணீர் செல்லும்போது அங்கிருந்து குழாய்கள் மூலம் கண்மாய்களுக்கும் நீரை கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.