கும்பகோணத்தில் பரபரப்பு: அ.தி.மு.க. விளம்பர பேனரை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி போராட்டம் அலுவலகத்தில் திருட்டு நடந்ததாக கூறி, போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதம்
கும்பகோணத்தில், அ.தி.மு.க. விளம்பர பேனரை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட டிராபிக் ராமசாமி, தனது அலுவலகத்தில் திருட்டு நடந்ததாக கூறி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு நேற்று மக்கள் பாதுகாப்பு கழக நிறுவனர் டிராபிக் ராமசாமி வந்தார். அப்போது கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் மதகடி தெரு பகுதியில் அ.தி.மு.க. சார்பில் விளம்பர பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்த டிராபிக் ராமசாமி, போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி, கோஷம் எழுப்பி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கும்பகோணம்- தஞ்சை சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதை அறிந்த கும்பகோணம் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார், உடனடியாக அங்கு சென்று விளம்பர பேனரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பேனர் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் அந்த வழியாக கார் ஒன்று நம்பர் பிளேட் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. அந்த காரை வழிமறித்த டிராபிக் ராமசாமி, அதன் டிரைவரிடம் நம்பர் பிளேட்டை உடனடியாக பொருத்தும்படி அறிவுரை கூறினார்.
பின்னர் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு டிராபிக் ராமசாமி சென்றார். அங்கு இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணனிடம், கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து கோர்ட்டு தொடர்பான ஆவணங்களையும், டி.வி., பிரிண்டர் உள்ளிட்டவற்றையும் மர்ம நபர்கள், திருடிச்சென்று விட்டதாகவும், அலுவலகத்தின் சாவியை மீட்டுத்தர வேண்டும் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார். இதையடுத்து டிராபிக் ராமசாமி அங்கிருந்து திரும்பி சென்றார்.