கும்பகோணம் அருகே மதுக்கடை ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1¾ லட்சம் வழிப்பறி 4 பேருக்கு வலைவீச்சு

கும்பகோணம் அருகே மதுக்கடை ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1¾ லட்சத்தை வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-12-27 23:00 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் மேல புதுத்தெருவை சேர்ந்தவர் குருநாதன்(வயது 46). இவர் கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடி காமராஜபுரத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுக்கடையில் கூடுதல் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இவர் கடையை பூட்டி விட்டு தனது மொபட்டில் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் மெயின் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவர் மது விற்பனை மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 100-ஐ ஒரு பையில் வைத்து இருந்தார்.

இந்த நிலையில் அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், குருநாதன் ஓட்டிச்சென்ற மொபட்டை மறித்தனர். திடீரென்று தனது மொபட்டை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மறித்ததால் அதிர்ச்சி அடைந்த குருநான் வேறு வழியில்லாமல் மொபட்டை நிறுத்தினார். அப்போது ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்திருந்த அவர்கள், குருநாதனின் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் கத்தியை வைத்து மிரட்டி அவர் பையில் வைத்து இருந்த ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்தையும், செல்போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று குருநாதன் புகார் அளித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், பணத்தை பறித்து சென்ற 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். மதுக்கடை ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி 4 பேர் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்