நாகர்கோவில் அருகே கர்ப்பிணி கொலை: “200 ரூபாய் காணாமல் போன ஆத்திரத்தில் தீர்த்துக் கட்டினேன்” கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
நாகர்கோவில் அருகே 200 ரூபாய் காணாமல் போன ஆத்திரத்தில் மனைவியை கொன்றதாக கைது செய்யப்பட்ட கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மேலகிருஷ்ணன்புதூர்,
இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனி குஞ்சன்விளையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). தொழிலாளி. இவருடைய மனைவி சுபிதா (26). இவர்களுக்கு ஸ்ரீதேவி (5), வர்சினி (1¾) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சுபிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று சுபிதாவை மணிகண்டன் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து மணிகண்டன் தலைமறைவானார். அவரை பிடிக்க சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சாமிதோப்பில் பதுங்கி இருந்த மணிகண்டனை கைது செய்தனர்.
போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடமும், உறவினர்களிடமும் தகராறு செய்வேன். சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றேன். வீட்டில் இருந்த 200 ரூபாயை எடுத்துக்கொண்டு மீண்டும் மது குடிக்க செல்லலாம் என முடிவு செய்தேன். ஆனால் அந்த ரூபாயை தேடிய போது காணவில்லை.
போதையில் இருந்த எனக்கு பணத்தை காணாததால் ஆத்திரம் ஏற்பட்டது. வீடு முழுவதும் தேடினேன். ஆனால் என்னுடைய மனைவி சுபிதா அதனை பொருட்படுத்தாமல் இருந்தார். இதற்கிடையே எனது மூத்த மகளின் புத்தகப்பையில் அந்த பணம் இருந்தது. இதனால், மகளை பிடித்து அடித்தேன். அதனை எனது மனைவி சுபிதா தடுக்க வந்தார். உடனே அவளையும் சரமாரியாக தாக்கினேன். இதில் அவர் நிலைகுலைந்தார்.
சுபிதாவின் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் அவரது உறவினர்கள் ஓடி வந்தனர். உடனே, நான் அங்கிருந்து தப்பி ஓடினேன். இதற்கிடையே மனைவி சுபிதா ஆஸ்பத்திரியில் இறந்தது தெரியவந்தது. இதனால் சாமிதோப்பு பகுதியில் தலைமறைவாக இருந்த என்னை போலீசார் பிடித்து விட்டனர்.
இவ்வாறு மணிகண்டன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலை தொடர்பாக சுபிதாவின் மூத்த மகள் ஸ்ரீதேவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, தந்தை மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதாகவும், சம்பவத்தன்று தன்னையும், தாயார் சுபிதாவையும் தாக்கியதாக அந்த குழந்தை கூறியது. இதையடுத்து இந்த கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக அந்த குழந்தை சேர்க்கப்பட்டுள்ளது.