செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.;

Update:2018-12-28 03:15 IST
சேலம், 

சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு ஊராட்சிக்கு உட்பட்டது பாத்திமா நகர். இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அங்கு வசிக்கும் பொதுமக்கள் பலர் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

பாத்திமா நகரின் மையப் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக முதல் கட்ட பணியான பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இங்கு செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அதையும் மீறி பணி தொடங்கப்பட்டு உள்ளது.

எங்களிடம் எந்தவித கருத்தும் கேட்கவில்லை. இங்கு செல்போன் கோபுரம் அமைத்தால், அதில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சால் குழந்தைகள் உள்பட பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படும். எனவே செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும். செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றால், கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி போலீசில் அவர்கள் மனு கொடுத்தனர். இதனால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்