நாமக்கல்லில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான கருத்தரங்கு 31-ந் தேதி நடக்கிறது
நாமக்கல்லில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான கருத்தரங்கு வருகிற 31-ந் தேதி நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் அடுத்த மாதம் (ஜனவரி) 23, 24-ந் தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. அதன்படி தொழில் சார்ந்த முதலீடுகளை ஏற்படுத்திட தொழில் முதலீட்டாளர்களோடு தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் செய்யப்பட உள்ளன.
இது குறித்து நாமக்கல் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்து மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்களை ஈர்க்கும் வண்ணம் வருகிற 31-ந் தேதி காலை நாமக்கல்லில் ஓட்டல் கோஸ்டல் ரெசிடென்சி கூட்ட அரங்கில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான கருத்தரங்கு நடைபெறுகிறது.
இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு புதிய தொழில்கள் மற்றும் விரிவாக்க தொழில்களுக்கான முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
எனவே, இதை பயன்படுத்தி ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், படித்த பொறியியல் வல்லுனர்கள், பல்துறையில் ஈடுபட்டு சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள முதலீட்டாளர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து தொழில் வளர்ச்சியில் தங்களது பங்களிப்பை வழங்கிட வேண்டும்.
இதன் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் பெருகும். மேலும், இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் முதலீட்டாளர்களின் நிறுவனங்களுக்கு, உரிமங்கள் மற்றும் அனுமதி போன்றவற்றை மாவட்டத்தின் பிற துறைகளிடம் இருந்து ‘தொழில் வசதியாக்கல் சட்டம்’ மூலமும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொள்கை அடிப்படையில் தேவையான மானிய உதவிகளை பெற்றுத்தரவும், மானியத்துடன் கூடிய கடன் உதவி திட்டங்கள் மூலம் வங்கிகளில் கடன் பெறவும் மாவட்ட தொழில் மையம் பரிந்துரை செய்யும்.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய பொருளாதார வளர்ச்சியில் தங்களுடைய பங்களிப்போடு வாழ்வில் நல்ல ஏற்றம் கொண்டு வர நாமக்கல் மாவட்டத்தை தொழில் வளர்ச்சியில் முதன்மை மாவட்டமாக உருவாக்கிட உறுதுணை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.