பாதி வழியில் பழுதாகி நிற்பதை தவிர்க்க புதிய 108 ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும் தொழிலாளர்கள், தர்மபுரி கலெக்டரிடம் கோரிக்கை
108 ஆம்புலன்ஸ் பாதி வழியில் பழுதாகி நிற்பதை தடுக்க புதிய ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கலெக்டர் மலர்விழியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் கீழ் 23 ஆம்புலன்ஸ்கள் செயல்படுகின்றன. இந்த மாவட்டத்தில் டிரைவர்கள், மருத்துவ உதவியாளர்கள் என 116 பேர் பணிபுரிந்து வருகிறோம். தர்மபுரி மாவட்டத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ்களில் கி.மீட்டரில் 3 லட்சத்திற்கும் மேல் ஓடிய பழைய வாகனங்கள் பாதிக்கும்மேல் உள்ளன.
சில 108 ஆம்புலன்ஸ்கள் 4 லட்சத்து 70 ஆயிரம் கி.மீ. முதல் 5 லட்சத்து 60 ஆயிரம் கி.மீ.வரை ஓடி உள்ளன. இவ்வாறு நீண்டகாலமாக ஓடும் வாகனங்கள் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களை ஏற்றி செல்லும்போது பாதிவழியில் பழுதாகி நிற்கும் நிலை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் சிகிச்சை தேவைப்படுபவர்கள் பாதிப்பிற்கும், சிரமத்திற்கும் உள்ளாகிறார்கள்.
இத்தகைய பிரச்சினைகளை தடுக்க அதிக தூரம் ஓடியுள்ள பழைய ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பதிலாக புதிய 108 ஆம்புலன்ஸ்களை வழங்க வேண்டும். தர்மபுரி, அரூர் ஆகிய நகரங்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும். சுற்றுலா தலமான ஒகேனக்கல், அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியான தொப்பூர் கணவாய் ஆகிய இடங்களில் நிரந்தரமாக இருந்து 108 ஆம்புலன்ஸ் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
108 ஆம்புலன்ஸ்களில் பணிபுரியும் ஆண், பெண் ஊழியர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்பசுகாதார நிலையங்களில் தனித்தனியாக கழிப்பறை வசதியுடன்கூடிய ஓய்வறைகளை ஏற்படுத்த வேண்டும். 10 ஆண்டுகளாக தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அவர்களுடைய சொந்த மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் திட்டம் என்ற மக்கள் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.