உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தர்மபுரி கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்யும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மலர்விழி எச்சரித்து உள்ளார்.

Update: 2018-12-27 23:00 GMT

தர்மபுரி,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரி கடைகள், இறைச்சிக் கடைகள், டீ கடைகள், பால் விற்பனை செய்யும் கடைகள், சாலையோரங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதேபோல் ஜவ்வரிசி, வெல்லம், எண்ணெய் மற்றும் குழல் அப்பளம் போன்ற உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டியது அவசியம் ஆகும். உணவு பொருட்களை விற்பனை செய்வோர் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்குவோரும் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த உரிமத்தை பெற உணவுப் பாதுகாப்புத் துறையை மட்டுமே அணுக வேண்டும். இடைத்தரகர்கள் எனக் கூறிக் கொள்ளும் எந்த நபர்களையும் உணவு வணிகர்கள் நம்பி ஏமாந்துவிடகூடாது. தர்மபுரி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டுக்கு ரூ.12 லட்சத்திற்கு குறைவான உணவு பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் பதிவு சான்றிதழுக்கு ரூ.100–ம், ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்திற்கு அதிகமாக விற்பனை செய்யும் ஓட்டல்கள், உணவு வணிகர்கள், நியமன அலுவலரால் வழங்கப்படும் உரிமத்திற்கு ரூ. 2000–ம் செலுத்த வேண்டும்.

ஒரு டன் வரை உற்பத்தி திறன் உள்ள பருப்பு ஆலை, எண்ணெய் ஆலை போன்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பவர்கள் ஆண்டுக்கு ரூ. 3000–மும், 2 டன் வரை உற்பத்தி திறன் கொண்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் 3 நட்சத்திர மற்றும் அதற்கும் மேற்பட்ட நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல்கள் ரூ. 5000–மும் கட்டணமாக செலுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு துறையின் உரிமத்தினை 5 ஆண்டுகள் வரை அதற்குரிய கட்டணம் செலுத்தி பெறலாம். உரிமம் காலாவதியாவதற்கு 30 நாட்களுக்கு முன்னர் உரிமத்தினை புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதமாக உரிமம் காலாவதியாகும் நாள் வரை விதிக்கப்படும்.

உரிமத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தவறினால் பழைய உரிம எண் கிடைக்காது. எனவே புதிய உரிமம் பெறும் வரை உணவு வணிக நிறுவனத்தின் இயக்கத்தினை சம்பந்தப்பட்ட உணவு வணிகர் தாமாகவே நிறுத்தி வைக்க வேண்டும். உணவு பாதுகாப்புத் துறையின் பதிவு சான்றிதழை தகுதிவாய்ந்த உணவு வணிகர்கள் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவைமையங்களில் விண்ணப்பித்து பெறலாம். இதுவரை உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத உணவு வணிகர்கள் உடனடியாக அந்த உரிமத்தை பெற வேண்டும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006–ன் கீழ் சம்பந்தப்பட்ட உணவு வணிக நிறுவனத்தின் செயல்பாட்டை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் வழங்கும் பணி முழுவதும் கணிணி மயமாக்கப்பட்டுள்ளது. எனவே உணவு பாதுகாப்புதுறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது ஆன்லைனில் உரிமக்கட்டணம் செலுத்தவேண்டும். கருவூல சலான் மற்றும் ரொக்கம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வருகிற 31–ந்தேதி (திங்கட்கிழமை) க்கு பின்னர் கருவூல சலான் ஏற்கப்படமாட்டாது. விண்ணப்பித்த பின் விண்ணப்ப நகலை நியமன அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்ப தேவையில்லை. வணிகர்கள் தங்கள் உரிம விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு கையொப்பமிடாத உரிமச் சான்றிதழ் இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் அனுப்பப்படும். அந்த சான்றிதழ் சட்டப்பூர்வமானதாகும்.

சான்றிட்ட நகல் வேண்டுமெனில் நியமன அலுவலரிடத்தில் கோரி பெற்றுக்கொள்ளலாம். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறியவும், உணவு பாதுகாப்பு உரிமம் குறித்த சந்தேகங்களுக்கு உரிய தெளிவை பெறவும், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலரை செல்போன் எண்ணிலோ, அல்லது வாட்ஸ்அப் புகார் எண்ணிலோ உணவு வணிகர்கள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்