தூத்துக்குடி மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளில் இருந்து 700 டன் உரம் தயாரிப்பு ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளில் இருந்து கடந்த 6 மாதத்தில் 700 டன் உரம் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்தார்.

Update: 2018-12-27 21:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளில் இருந்து கடந்த 6 மாதத்தில் 700 டன் உரம் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

விரிவாக்கம் 

தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இங்கு 110 கடைகள் உள்ளன. இந்த பஸ் நிலையம் விரிவாக்கப்பணிகள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும். இந்த பஸ் நிலையம் மூடப்படும்போது, அனைத்து பஸ்களையும் தற்போது உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பகுதியில் தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை தினம்தோறும் வழங்கவும், சீரான குடிநீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் வீணாகாமல் தடுக்க மத்திய அரசு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

700 டன் உரம் 

தூத்துக்குடி மாநகராட்சியில் கழிவுகள் மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 110 லோடு ஆட்டோக்கள் மூலம் தினமும் வீடுகள்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த மக்கும் குப்பைகள் 14 நுண்உரம் தயாரிப்பு நிலையம் மூலம் உரமாக மாற்றப்படுகிறது. கடந்த 6 மாதத்தில் 700 டன் உரம் தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று மக்காத குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு துப்புரவு பணியாளர்களால் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை சுமார் ரூ.1 கோடி அளவுக்கு பிளாஸ்டிக் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அந்த தொகை 900 துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து துப்புரவு பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறினார்.

மேலும் செய்திகள்