விளைநிலங்கள் வழியாக 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு: நெல்லை கலெக்டர் அலுவலகத்தை 28 கிராம விவசாயிகள் முற்றுகை

ராஜபாளையம் –செங்கோட்டை இடையே விளைநிலங்கள் வழியாக 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை 28 கிராம விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2018-12-27 22:15 GMT

நெல்லை, 

ராஜபாளையம் –செங்கோட்டை இடையே விளைநிலங்கள் வழியாக 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை 28 கிராம விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

4 வழிச்சாலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து செங்கோட்டை வழியாக புளியரை வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை வரைபடம் தயாரித்து அறிவித்து உள்ளது. அந்த வரைபடத்தின்படி சாலை அமைய இருக்கும் பகுதியில் இடம் ஆர்ஜிதம் செய்யும் பணியை அதிகாரிகள் அளவீடு செய்து கல் நட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் சிவகிரி, புளியங்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் இந்த புதிய 4 வழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் விளைநிலங்கள் வழியாக சாலை அமைக்கக்கூடாது. இதற்காக விவசாய நிலத்தை ஆர்ஜிதம் செய்யக்கூடாது என்று போராடினர். ஆனால், அதிகாரிகள் திட்டமிட்டபடி சாலை அமைக்கும் பணிக்கு தேவையான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் சிவகிரி, வாசுதேவநல்லூர், சிந்தாமணி, புளியங்குடி, டி.என்.புதுக்குடி, சுப்பிரமணியாபுரம், விசுவநாதபேரி, உள்ளாறு, ஆற்றுவழி, மேலப்புதூர் உள்பட 28 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று ஒன்று திரண்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். என்.எச்.–744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்க தலைவர் மாடசாமி, முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி சண்முகம் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் என ஏராளமானோர் திரண்டனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கேயே தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நஞ்சை நிலங்களை காப்பாற்றுங்கள், வனப்பகுதியை காப்பாற்றுங்கள், இந்த திட்டம் மக்களுக்காகவா? தனியாருக்காகவா? என்று பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையில் ஏந்தி கோ‌ஷமிட்டனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

அவர்களிடம், நிர்வாகிகள் 5 பேர் மட்டும் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுக்க அனுமதிப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் விவசாயிகள், ‘‘அனைவரும் தாங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக மனுக்கள் கொடுக்க வேண்டி இருப்பதால் அனைவரையும் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்‘‘ என்றனர்.

ஆனால் போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நிலங்கள் பாதிப்பு

இதை அறிந்த கலெக்டர் ஷில்பா ஒவ்வொரு விவசாயிடமும் தனித்தனியாக கருத்துகளை கேட்க முடிவு செய்தார். இதையடுத்து வரிசையாக விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார். இதில் சங்கங்கள் சார்பில் பொதுமக்கள், விவசாயிகள் சார்பில் தனித்தனி மனுக்கள் என 500–க்கும் மேற்பட்ட மனுக்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டன.

அப்போது விவசாயிகள் தங்களது கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் பேசினர். ‘‘தற்போது அமைக்க திட்டமிட்டுள்ள என்.எச்.–744 தேசிய நெடுஞ்சாலை வனப்பகுதியின் அருகே உள்ளது. இந்த பகுதி வனவிலங்கு பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, 10 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் சாலை அமைக்க முடியும். ஆனால் தற்போது 6 கிலோ மீட்டர் தூரத்தில் சாலை அமைக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த சாலை அதிக வளைவுகளுடன் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் 400 ஏக்கர் நன்செய் நிலம், 40 கிணறுகள், 500–க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் பாதிக்கப்படும்.

மாற்று வழிப்பாதை

எனவே, இதற்கு மாற்றாக மீனாட்சிபுரத்தில் இருந்து தென்மலை, கூடலூர், நெல்கட்டும் செவல், பாம்பு கோவில் சந்தை சந்திப்பு, கடையநல்லூர், இடைகால், இ–விலக்கு, செங்கோட்டை வழியாக 4 வழிச்சாலை அமைக்க வேண்டும். இந்த மாற்றுப்பாதை திட்டத்தின் மூலம் 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரம் குறையும். மேலும் சாலை அமைக்கும் செலவு, பயண தூரம், பயண நேரம், எரிபொருள், வாகன தேய்மானம் ஆகியவை பெருமளவு குறையும். குறிப்பாக நன்செய் நிலங்கள் பாதிக்கப்படாது‘‘ என்று விவசாயிகள் வலியுறுத்தினார்கள். மேலும் இதற்காக தாங்கள் தயாரித்த வரைபடத்தையும் கலெக்டரிடம் சமர்ப்பித்தனர்.

அப்போது கலெக்டர் விவசாயிகளிடம் கூறுகையில், ‘‘இது மத்திய அரசின் திட்டம் ஆகும். விவசாயிகள் அளித்துள்ள மாற்று வழித்திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்’’ என்று கூறினார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கலெக்டர் காருக்கு வழிவிட்ட விவசாயிகள்

விவசாயிகள் போராட்டம் காரணமாக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கொக்கிரகுளம் மெயின் ரோட்டில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் ரோட்டில் வாகனங்கள் நுழைய முடியாத வகையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே கிராசிங் பகுதியை இரும்பு தடுப்புகளை கொண்டு மூடினர். இருந்தபோதிலும் விவசாயிகள் தாங்கள் வந்த வேன்களில் அறிவியல் மையம் வழியாக சுற்றி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து விடாதபடி போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி அடைத்து வைத்திருந்தனர். மேலும் விவசாயிகளும் நுழைவு வாசலை முழுவதுமாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலெக்டர் ஷில்பா காரில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரது காரை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுப்ப போலீசார் சிரமப்பட்டு வழியை ஏற்படுத்தினர். அப்போது விவசாயிகள் கலெக்டர் கார் உள்ளே செல்ல வழிவிட்டு நின்றனர். இதன் காரணமாக அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்