கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் உடல் மறு பிரேத பரிசோதனை - தாசில்தார் முன்னிலையில் நடந்தது

கண்ணமங்கலம் அருகே புதைக்கப்பட்ட ராணுவ வீரர் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தாசில்தார் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2018-12-26 23:09 GMT
கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 32), ராணுவ வீரர். குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் அவர் தனது குடும்பத்துடன் அம்மாபாளையம் கிராமத்திற்கு வந்தார். கடந்த மாதம் 19-ந் தேதி இரவு தனது மனைவி மோகனாவுடன் தகராறு செய்துவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

மறுநாள் 20-ந் தேதி காலை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பாலசுந்தரம் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மோகனா கொடுத்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் பாலசுந்தரத்தின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகனா திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தனது கணவர் பாலசுந்தரம் சாவில் சந்தேகம் உள்ளது என்று மனு செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, பாலசுந்தரத்தின் உடலை மீண்டும் மறுபிரேத பரிசோதனை செய்து அதன் அறிக்கையை 26-ந் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய ஆரணி தாசில்தார் கிருஷ்ணசாமிக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் கடந்த 24-ந் தேதி பாலசுந்தரத்தின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய ஆரணி தாசில்தார் கிருஷ்ணசாமி ஆரணி அரசு மருத்துவமனை மூலம் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஏற்கனவே வேலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்த பிரேத பரிசோதனையை மீண்டும் அதைவிட கூடுதல் தகுதி பெற்ற டாக்டர்கள் தான் செய்ய வேண்டும் என மறுத்துவிட்டதால் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை.

இதையடுத்து ஆரணி தாசில்தார் கிருஷ்ணசாமி திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீனுக்கு மறு பிரேத பரிசோதனைக்காக டாக்டர்களை அனுப்பி வைக்க வேண்டும் என கடிதம் எழுதினார்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் கமலக்கண்ணன், செங்கோட்டுவேல் ஆகியோர் நேற்று அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர் பாலசுந்தரத்தின் உடலை தோண்டி எடுத்து ஆரணி தாசில்தார் கிருஷ்ணசாமி முன்னிலையில் அதே இடத்தில் மறுபிரேத பரிசோதனை செய்தனர்.

அப்போது கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் சுபிசந்தர், மோகனா மற்றும் அவரது குடும்பத்தினர், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

பின்னர் டாக்டர் கமலக்கண்ணன், பிரேத பரிசோதனை அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

மேலும் செய்திகள்