மேலவளவில் துணை மின்நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

மேலூர் அருகே உள்ள மேலவளவில் துணை மின் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

Update: 2018-12-26 22:15 GMT
மேலூர், 


மேலூர் தொகுதியில் மக்களுக்கு குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது. மேலவளவு பகுதியில் சீரான மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்து வந்தனர். கிணற்று தண்ணீரை மட்டுமே நம்பி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், மின் மோட்டார்கள் இயங்க தேவையான அதிக அழுத்த மின்சாரம் கிடைக்காமல் தவித்தனர். இதனால் மேலவளவில் சீரான மின்சாரம் கிடைக்க புதிய துணை மின் நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களது கோரிக்கைக்கு பலனாக மேலவளவில் துணை மின் நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி தற்போது மேலவளவில் துணை மின்நிலையம் அமைய உள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த மின்சார பற்றாக்குறையை போக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விழாவில் அ.தி.மு.க. கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன், அ.வல்லாளபட்டி கிளைச் செயலாளர் மணிகண்டன், மதுரை புறநகர் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் தமிழரசன், மேலூர் ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, நகராட்சி முன்னாள் கவுன்சிலர் சரவண குமார், மதுரை மின்வாரிய மேற்பார்வையாளர் பிரிதாபத்மினி, உதவி மேற்பார்வையாளர் கண்ணன், மேலவளவு கிராம மக்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்