‘அ.தி.மு.க. அரசு மக்களின் செல்வாக்கை இழந்து விட்டது’ கடையநல்லூர் எம்.எல்.ஏ. பேட்டி
அ.தி.மு.க. அரசு மக்களின் செல்வாக்கை இழந்து விட்டதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. முகம்மது அபுபக்கர் தெரிவித்தார்.;
மதுரை,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி மதுரையில் நடக்கிறது. இது குறித்த ஆலோசனைக்கூட்டம் கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. முகம்மது அபுபக்கர் தலைமையில் மதுரையில் நேற்று நடந்தது. பின்னர் இது குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசு மதச்சார்பின்மைக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. இதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே, இதயங்களை இணைப்போம், இந்தியாவை மீட்போம் என்ற கருத்தை மையமாக வைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு நடத்தப்படுகிறது.
மதுரை மாநாட்டில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இதற்காக மாநாட்டு குழுக்கள் மாவட்ட அளவில் ஏற்படுத்தப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. வருகிற 1-ந் தேதி முதல் ஜமாஅத் அளவிலான கூட்டங்களுக்கும், தெருமுனை பிரசாரங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்தில், சிறுபான்மையினருக்கு எதிரான நிலைப்பாடு, ஜனநாயக விரோத செயல்பாடுகள் ஆகியன குறித்து மக்களுக்கு விளக்கப்படும். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க.வின் தோல்வி அதன் செயல்பாடுகளை தோலுரித்து காட்டியுள்ளது.
எனவே, நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் அமைய எங்கள் கட்சி பாடுபடும். தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்கிறது. தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசும் மக்களின் செல்வாக்கை இழந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, கட்சியின் நிர்வாகிகள் ஷாஜகான், இப்ராஹிம் மக்கீ, அப்துல்காதிர் ஆலிம், டாக்டர் ஏ.கே.முகைதீன், பேராசிரியை தஸ்ரீப் ஜகான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.