அரசு வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி; டாஸ்மாக் அலுவலக உதவியாளர் கைது

திருச்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த டாஸ்மாக் அலுவலக உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-26 21:15 GMT
திருச்சி, 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது32). இவர் டிப்ளமோ கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்துவிட்டு கணினி கேமரா பொருத்தும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய உறவினர் ஒருவர் மூலம் உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்த தர்மலிங்கத்தின்(55) அறிமுகம் அவருக்கு கிடைத்தது. தர்மலிங்கம் திருச்சி துவாக்குடி டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தீனதயாளனிடம் அரசு வேலை வாங்கி தருவதாக தர்மலிங்கம் கூறியுள்ளார். மேலும் அதற்கு ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு தீனதயாளன், தர்மலிங்கத்திடம் ரூ.5 லட்சம் கொடுத்தார்.

பணத்தை பெற்ற பின் தர்மலிங்கம், அரசு வேலை வாங்கி கொடுக்காமல் இருந்தார். இதனால் பணத்தை தீனதயாளன் திருப்பி கேட்ட போது கொடுக்கவில்லை. இதனால் அவர் மீது, ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் தீனதயாளன் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தர்மலிங்கத்தை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். கைதான அவரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையில் மோசடி வழக்கில் கைதான அவர் மீது டாஸ்மாக் நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளது.

மேலும் செய்திகள்