விற்பனை ஆகாததால் தேக்கம் அடைந்த செவ்வந்தி பூக்களை சாலையில் கொட்டி வியாபாரிகள் போராட்டம்
விற்பனை ஆகாததால் தேக்கம் அடைந்த செவ்வந்தி பூக்களை வியாபாரிகள் சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
திருச்சி,
கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் செவ்வந்திப்பூ சீசன் களைகட்டும். 3 மாத காலத்தில் விவசாயிகள் அதிக அளவில் செவ்வந்தி பூக்களை சாகுபடி செய்து அவற்றை பூ மார்க்கெட்டில் விற்பனை செய்து உடனடியாக பணத்தை பெற்று செல்வார்கள். 1 கிலோ செவ்வந்தி ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை ஆவதுண்டு. ஆனால், தற்போது சபரிமலை பிரச்சினை மற்றும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னமும் மீளமுடியாமல் மக்கள் இருப்பதால், திருச்சியில் இருந்து அங்கு வினியோகிக்க கூடிய செவ்வந்தி பூக்கள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் பூ வரத்து அதிகரித்து இருப்பதாலும் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. நல்ல தரமான பூக்கள் கிலோ ரூ.20-க்கும், சுமாரான பூக்கள் ரூ.10-க்கும் நேரம் செல்லச்செல்ல 2 கிலோ 10 ரூபாய் என்றும் கூவி கூவி விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அதை வாங்குவதற்கு யாரும் முன்வராததால் தேக்கம் அடைந்த செவ்வந்தி பூக்களை குப்பையில் கொட்டி வருகிறார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பூ மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்த செவ்வந்தி பூக்களை வியாபாரிகள் மூட்டை மூட்டையாக கட்டி குப்பையில் கொட்டும் அவலம் நடந்து வருகிறது. வியாபாரிகளுக்கே இந்த நிலை என்றால், செவ்வந்தி பூக்களை உற்பத்தி செய்த விவசாயிகள் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரியது. பூக்களை அறுவடை செய்து பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த லாரி வாடகையை கூட கொடுக்க முடியாமல் விவசாயிகள் திணறி, கதிகலங்கி போய் நிற்கிறார்கள்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் நேற்று செவ்வந்தி பூக்களை சாலையில் கொட்டி நூதன போராட்டத்தை நடத்தினர். இது தொடர்பாக அண்ணா புஷ்ப தொழிலாளர் சங்க செயலாளர் ரெங்கராஜ் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டம் தொப்பூர், பொம்மிடி மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் இருந்து விவசாயிகள் சாகுபடி செய்த செவ்வந்தி பூக்களை லாரிகளில் எடுத்து வந்து விற்பனை செய்கிறார்கள். இங்கு விற்பனை ஆகவில்லை என்றாலும், கொண்டுவந்த பூக்களை திரும்ப கொண்டு செல்லவிருப்பம் இல்லாமல் கொடுத்து விடுகிறார்கள். நேற்று விவசாயிகள் பூக்கள் கொண்டு வந்த லாரிக்கு வாடகை கொடுக்க முடியாமல் தவியாய் தவித்தனர். வியாபாரிகள், லாரிக்கு டீசல் போடும் அளவுக்கு பணத்தை வசூல் செய்து கொடுத்தோம். ஊருக்கு சென்றவுடன் முதல் வேலையாக செவ்வந்தி பூக்கள் சாகுபடி செய்த இடத்தை டிராக்டர் விட்டு உழவு செய்ய போவதாக வேதனையுடன் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் தங்களது வாழ்வாதாரமே போய்விட்டது என்று அவர்கள் புலம்பி தவிக்கிறார்கள்.
திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், மாயவரம் பகுதியில் கஜா புயல் பாதிப்பால் அங்கு இன்னமும் போதிய அளவில் பூக்கள் அனுப்பி வைக்க முடியவில்லை. இதனால் தேக்கம் அடைந்த பூக்களை குப்பையில் கொட்டி வருகிறோம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வந்தி பூக்கள் ஓரளவு விற்பனை ஆகி வந்தது. நேற்றுடன் விழா முடிந்து விட்டதால் இனி செவ்வந்தி பூக்கள் சுத்தமாக விற்பனை ஆகாது.
அதே வேளையில் விருச்சிப்பூ கிலோ ரூ.60-க்கும், சம்பங்கி ரூ.20, ரோஜா ரூ.30, அரளி ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பனிக்காலம் என்பதால் பூக்களின் மொட்டுகள் கருகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் மல்லிகைப்பூ கிலோ ரூ.700, முல்லை ரூ.700, ஜாதிப்பூ ரூ.400, காக்கரெட்டான் ரூ.300, கனகாம்பரம் ரூ.800 என விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகம் என்பதால் அப்பூக்களை வாங்கவும் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.