வியாபாரிகளிடம் ரூ.30 கோடி வைரகற்கள் மோசடி ஒருவர் கைது

வியாபாரிகளிடம் இருந்து ரூ.30 கோடி வைரகற்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-12-26 23:00 GMT
மும்பை,

மும்பை பாந்திரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் வைர வியாபாரிகளின் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் ஏஜெண்ட்டாக யதீஷ் (வயது35) என்பவர் இருந்து வந்தார். நீண்ட நாளாக இவர் வியாபாரிகளிடம் இருந்து வைரங்களை பெற்று மற்ற வியாபாரிகளுக்கு நியாயமான விலைக்கு விற்று வந்ததுள்ளார். இதனால் வியாபாரிகளும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர்.

இந்தநிலையில், யதீஷ் கடந்த 11-ந்தேதி அப்பகுதியில் இருந்த 25 வியாபாரிகளிடம், ரூ.30 கோடி மதிப்புள்ள வைரகற்களை பெற்று கொண்டு விற்று தருவதாக கூறி சென்றார். ஆனால் தற்போது வரை அவர் திரும்பி வரவில்லை.

வியாபாரிகள் அவரை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர் தலைமறைவானது தெரியவந்ததால் சம்பவம் குறித்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இந்த மோசடியில் யதீசுடன் காந்திவிலியை சேர்ந்த விஜய்பார்மர் (38) என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விஜய்பார்மரை பிடித்து கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள யதீசை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்