திருச்சி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; ரூ.500 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ரூ.500 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
திருச்சி,
தேனா வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாராக்கடன்களை வசூலிப்பதில் முறையான சட்ட திட்டங்களை அரசு வகுக்க வேண்டும், நாட்டின் கவனத்தை தேவையற்ற நடவடிக்கைகள் மூலம் அரசு திசை திருப்பக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்திலும் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட 400 வங்கி கிளைகள் நேற்று திறக்கப்படாமல் மூடிக்கிடந்தன. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பலர், வங்கி அதிகாரிகள், ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தெரியாமல், வங்கிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது.
வேலை நிறுத்தம் காரணமாக இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று காலை திருச்சி ஜென்னிபிளாசா வளாகத்தில் செயல்படும் இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கு வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு (யூ.எப்.பி.யூ.) சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கோஷங்களும் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் சுப்பிரமணியன், இணை செயலாளர் அனந்தபத்மநாபன் மற்றும் வங்கி ஊழியர்கள், பெண் ஊழியர்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, வங்கிகளில் பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது. வழக்கம்போல் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டன. வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகை செலுத்துபவர்கள் ஏ.டி.எம். மையம் மூலமாகவே செலுத்தினர். ஆனால், பெரிய அளவிலான பணபரிமாற்றம் முற்றிலும் தடைபட்டது.
வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் ராமராஜ் கூறியதாவது:-
வங்கிகள் இணைப்பை எதிர்ப்பது, வங்கிகளின் வாராக்கடன்களை வசூலிக்க முறையான திட்டமிடல் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்டத்தில் 400 வங்கிகளில் பணியாற்றும் 3 ஆயிரம் அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் இல்லாததால் பண பரிவர்த்தனைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.500 கோடிக்கு பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய கோரிக்கைக்கு மத்திய அரசு இனியும் செவி சாய்க்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை. எனவே மத்திய அரசு உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.