டிரைவருடன் நடுரோட்டில் தகராறு; பஸ் மோதி அய்யப்ப பக்தர் பலி
செங்கல்பட்டு அருகே விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவருடன் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட அய்யப்ப பக்தர் அரசு பஸ் மோதி பலியானார். டிரைவர் படுகாயம் அடைந்தார்.
செங்கல்பட்டு,
சென்னை தியாகராயநகர் நடராஜபுரத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 45). இவர், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் 15 அய்யப்ப பக்தர்களுடன் ஒரு வேனில் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு இன்னும் சில பல கோவில்களுக்கும் சென்று விட்டு அதேவேனில் நேற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் சென்ற வேன் காலை 5 மணி அளவில் செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இருங்குன்றம் பள்ளி என்ற இடத்தின் அருகே வந்தது. அப்போது தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ் ஒன்று அய்யப்ப பக்தர்கள் சென்ற வேனை முந்திச் சென்றது. அப்போது பஸ்சும் வேனும் எதிர்பாராதவிதமாக ஒன்றோடு ஒன்று லேசாக உரசிக்கொண்டன. எனினும் பஸ் நிற்காமல் சென்றது.
இதனால் ஆத்திரமடைந்த அய்யப்ப பக்தர்கள் தங்களது வேனில் முந்திச்சென்று பஸ்சை வழிமறித்தனர்.
பின்னர், பஸ் டிரைவரான காஜாமொய்தீனிடம்(50) அய்யப்ப பக்தர்களில் ஒருவரான முருகன் தகராறில் ஈடுபட்டார். இதனால் காஜாமொய்தீன் கீழே இறங்கி வந்தார். இருவரும் நடுரோட்டில் நின்றவாறு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சேதமடைந்த வேனை சரிசெய்வதற்கு முருகன் தனியார் சொகுசு பஸ் டிரைவரிடம் பேரம் பேசிய தாக கூறப்படுகிறது.
அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் நடுரோட்டில் சண்டையிட்டு கொண்டிருந்த இருவர் மீதும் பயங்கரமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் அய்யப்ப பக்தர் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
தனியார் சொகுசு பஸ் டிரைவர் காஜாமொய்தீன் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் விசாரணையில் இவர் சென்னை ஆலந்தூர், பாரதிதாசன் நகரைச்சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.