மத்திய அரசின் புதிய கட்டண முறையை எதிர்த்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய கேபிள் கட்டண முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கேபிள் டி.வி. உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
மத்திய அரசு புதிதாக அறிவித்திருக்கும் கேபிள் கட்டண முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் நிறுவன தலைவர் பி.சகிலன் தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் தணிகைவேலு, பொதுச் செயலாளர் வீரமுத்து, பொருளாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.கே.ரங்கராஜன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.மகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பி.சகிலன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விரும்பிய கேபிள் சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் புதிய நடைமுறையை மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்த உள்ளது. தற்போது 200-க்கும் அதிகமான இலவச சேனல்கள், 80-க்கும் மேற்பட்ட கட்டண சேனல்களுக்கு மாதம் ரூ.160-ம், 300-க்கும் மேற்பட்ட முக்கிய சேனல்களுக்கு ரூ.200-ம், எச்.டி. தர சேனல்களுக்கு ரூ.300-ம் என வாடிக்கையாளர்கள் கேபிள் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய நடைமுறையால், இனி கேபிள் பயன்பாட்டை உபயோகிக்க மாதம் ரூ.600 முதல் ரூ.800 வரை செலவாகும். ‘செட்-ஆப்’ பாக்ஸ் பயன்பாட்டாளர்கள் இனி மாதம் ரூ.1,000 வரை கட்டணம் செலுத்த நேரிடும்.
அதேபோல கேபிள் டிவி இணைப்புக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். எனவே மக்களுக்காகவும், கேபிள் டி.வி. தொழிலை நம்பியுள்ள 24 ஆயிரம் ஆபரேட்டர்கள் உள்பட 3.5 லட்சம் தொழிலாளர்களுக்காகவும் இந்த புதிய கட்டண முறையை ரத்து செய்யவேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள கட்டணத்திலேயே கேபிள் டி.வி. நடத்திட அனுமதித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.